வேளாண்மை தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்
வேளாண் விளைபொருள் வணிகம், உழவர் பாதுகாப்புத் தொடர்பான இரு மசோதாக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இன்றியமையாப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாயன்று நிறைவேற்றப்பட்டது. உழவர்களின் விளைபொருள் வணிக மசோதா, விலை உத்தரவாதத்துக்கான உழவர் உடன்பாடு மற்றும் வேளாண் பணிகள் மசோதா ஆகியவற்றை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் நேற்றுத் தாக்கல் செய்தார்.
அப்போது, வேளாண்மையை லாபமுள்ளதாக ஆக்கவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்படுவதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் முறைக்கு இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டங்கள் மாநில அரசுகளின் வேளாண் விளைபொருள் விற்பனைக் குழுச் சட்டங்களைப் பாதிக்காது என்றும் அவர் உறுதியளித்தார்.
வேளாண் விளைபொருட்களின் விலையைக் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் இணைப்பதை ஏன் உறுதிப்படுத்தவில்லை என இடதுசாரி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வேளாண் விளைபொருள், உழவர்கள் தொடர்பான 3 அவசரச் சட்டங்கள் ஜூன் ஐந்தாம் நாள் பிறப்பிக்கப்பட்டதில் இருந்தே பஞ்சாபில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மக்களவையில் மூன்று மசோதாக்களுக்கும் எதிராகத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் வாக்களித்ததுடன், அந்தக் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகினார்.
எனினும் இந்த மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. வேளாண்மை தொடர்பான சர்ச்சைக்குரிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்துப் பஞ்சாப், அரியானா மாநில உழவர் அமைப்புகள் செப்டம்பர் 24, 25, 26 ஆகிய மூன்று நாட்கள் ரயில் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
Comments