சிறுமிக்கு பாலியல் கொடுமை இளைஞனுக்கு வலைவீச்சு

0 5833
சிறுமிக்கு பாலியல் கொடுமை இளைஞனுக்கு வலைவீச்சு

சென்னையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய நபரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை தீவுத் திடல் அருகே அன்னை சத்யா நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். மாநகராட்சிப் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த 28 வயதான மணிகண்டன் என்பவன், சிறுவர்- சிறுமிகளிடம் காசு கொடுத்து தின்பண்டம் வாங்க அனுப்பியுள்ளான்.

பின்னர், 11 வயது சிறுமியை அங்கிருந்த குடிசை வீட்டிற்கு அழைத்துச் சென்று, மிரட்டிப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

சிறுமியின் உடலில் ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால், பெற்றோர் அவரை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.

இதனிடையே, சிறுமியுடன் விளையாடிய சிறுவர்-சிறுமியர் சம்பவ இடத்தில் மணிகண்டன் இருந்ததைத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் முத்தியால்பேட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்த மணிகண்டன், சத்யா நகரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறான். கர்ப்பமாக உள்ள மனைவியை மாமியார் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, கஞ்சா போதையில் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் தேடுவதை அறிந்து அவன் சொந்த ஊருக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதால் தனிப்படை போலீசார் திருவண்ணாமலைக்கு விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments