வாக்கிடாக்கியுடன் கொலம்பியன் கொள்ளையர்ஸ்..! காட்டிக்கொடுத்த நகைகள்

0 4589
வாக்கிடாக்கியுடன் கொலம்பியன் கொள்ளையர்ஸ்..! காட்டிக்கொடுத்த நகைகள்

சேலத்தில் நகைகடை அதிபர் வீட்டில் இரண்டே கால் கிலோ தங்க நகைகளும், 57 கேரட் வைரங்களும் கட்டுகட்டாக பணமும் கொள்ளை போன சம்பவத்தில் கொலம்பியா நாட்டை சேர்ந்த கொள்ளையர்களின் தொடர்பு இருப்பதை 9 மாதம் கழித்து போலீசார் கண்டறிந்துள்ளனர். வாக்கிடாக்கியுடன் ஹை டெக்காக பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் பெண் உள்ளிட்ட மூவர் கொள்ளை கும்பல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் ஏ.என்.எஸ் திவ்யம் ஜுவல்ஸ் என்ற பெயரில் நகைகடை நடத்தி வந்த ஸ்ரீபாஸ்யம் என்பவரது பங்களா வீட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொள்ளையர்கள் புகுந்தனர்.

பங்களாவில் இருந்து 2.25 கிலோ தங்க நகைகளையும், 57 கேரட் வைரங்களையும், 6 லட்சம் ரூபாயையும், 400 அமெரிக்க டாலர்களையும் மொத்தமாக கொள்ளையர்கள் அள்ளிச்சென்றனர். பங்களாவில் உள்ள கேமராவில் இரண்டு வாலிபர்கள் சுவர் ஏறி குதித்து வருவதும், பின்னர் கொள்ளையடித்து விட்டு திரும்பி செல்வதும் பதிவாகி இருந்தது

இதனை வைத்து கடந்த 9 மாதமாக கொள்ளையர்களை சூரமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர் . பங்களாவில் கைப்பற்றப்பட்ட கைரேகைகளை 80 பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டு பார்த்தும் பலனில்லை, இந்த நிலையில் கடந்த மாதம் பெங்களூரில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற பெண் உள்ளிட்ட 3 கொலம்பிய கொள்ளையர்களை கையும் களவுமாக பெங்களூரு போலீசார் சுற்றிவளைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் 31 வீடுகளிலும், சேலத்தில் நகைகடை அதிபர் வீட்டிலும் திருடியதை ஒப்புக் கொண்டு கொள்ளையடித்த மொத்த நகைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 3 கொள்ளையர்களையும் நிற்கவைத்து கைப்பற்றப்பட்ட நகைகளை தனி தனியாக தொங்கவிட்டு நகைக்கடை போல காவல்துறையினர் காட்சி படுத்தினர்.

பெங்களூரு போலீசார் காட்சி படுத்திய நகைகள் அனைத்தும் தனது வீட்டில் களவு போனது போலவே இருப்பதாக நகைக்கடை அதிபர் சுட்டிக்காட்டிய நிலையில் கடந்த வாரம் பெங்களூரு விரைந்தனர் சூரமங்கலம் காவல்துறையினர். சம்பந்தப்பட்ட 3 கொள்ளையர்களும் பெங்களூரில் 30க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்தவர்கள் என்றும் 1 லட்சம் ரூபாய் வீதம் நீதிமன்றத்தில் செலுத்தி தனி நபர் ஜாமீன் பெற்று வெளியேவந்த மூவரும் தற்போது தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்துள்ளது.

மேலும், அவர்களின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் இருப்பதால் அவர்கள் வெளி நாடு தப்பி இருக்க முடியாது என்று தமிழக போலீசாரிடம் பொங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து கொலம்பியாவை சேர்ந்த பெண் உள்ளிட்ட 3 பேரின் புகைபடங்களுடன் சூரமங்கலம் காவல்துறையினர் பெங்களூரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலம்பிய கொள்ளையர்கள் குறித்து போலீசார் தெரிவித்த தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன.

கொலம்பியா நாட்டில் இருந்து விமானத்தில் வந்துள்ள இந்த கொள்ளை கும்பல் உடல் முழுவதும் ஜெர்க்கின் போன்ற உடையுடன், பூட்டி இருக்கும் வீடுகளை பெண்ணை விட்டு நோட்டமிட்டு, வீட்டில் ஆள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பூட்டை எளிதாக உடைத்து திறந்து விடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

பெரும்பாலான குற்றசம்பவங்களில் செல்போன் சிக்னல்கள் கொள்ளையர்களை காட்டிக்கொடுத்து விடுவதால் தங்களுக்குள் வாக்கி டாக்கி மற்றும் செல்போன் சிக்னல் ஜாமர் கருவியுடன் தான் கொள்ளையில் ஈடுபடுவார்கள் என்றும் எந்த ஒரு கதவையும் எளிதாக உடைத்து உள்ளே செல்லும் அளவுக்கு சாதனங்களை கொலம்பிய கொள்ளையர்கள் கையில் வைத்திருப்பதாக போலீசார் சுட்டிக்காட்டுகின்றனர்.

5க்கும் மேற்பட்ட கொலம்பியர்கள் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் 3 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. பெரும்பாலும் பங்களா போன்ற வீடுகள் மற்றும் நகைகடைகளை குறிவைத்து நகை பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பது இவர்களது வழக்கம் என்கின்றனர் காவல்துறையினர். தமிழகத்திலும் பல்வேறு காவல் நிலையங்களுக்கு இந்த கொலம்பிய கொள்ளையர்களின் புகைபடங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தால் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் கண்காணிக்க வசதியாக இருக்கும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். விரைவில் இந்த கொலம்பிய கொள்ளையர்கள் சிக்குவார்கள் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கர்நாடக காவல்துறையினர் சேலம் போலீசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்தால், கொலம்பிய கொள்ளையர்களிடம் கைப்பற்றப்பட்ட நகைகளை தமிழக போலீசிடம் ஒப்படைக்க வேண்டி இருக்கும் என்பதால், சுய நலத்துடன் தகவல் தெரிவிக்காமல் மறைத்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments