கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் தந்தையே மகளின் உடலை தூக்கிச் சென்ற அவலம்

0 5162
கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் வராத காரணத்தால் தந்தையே மகளின் உடலை தூக்கிச் சென்ற அவலம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விவசாய நிலத்தில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி கால் தவறி கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 108 ஆம்பூலன்ஸ் வராத காரணத்தினால் சிறுமியின் சடலத்தை 2 கிலோ மீட்டர் தூரம் தந்தையே தோளில் சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்தது. 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சேதாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஊழியர் ரகு. இவருக்கு பரிமளா என்ற மனைவியும் 5 வயதில் கிருபாஸ்ரீ, 2 வயதில் நர்மதா ஆகிய இரு மகள்கள் இருந்தனர். சேதாரம்பட்டு கிராமத்தின் ஏரிக்கரை அருகில் உள்ள தன்னுடைய சொந்த விவசாய நிலத்தில் பரிமளா வழக்கம் போல் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது மூத்த மகள் கிருபாஸ்ரீ மற்ற குழந்தைகளுடன் நிலத்தின் அருகே விளையாடிய போது கால் தவறி அருகில் இருந்த விவசாய கிணற்றில் விழுந்துள்ளார். உடனடியாக தாய் பரிமளா ஓடிவந்து கூச்சலிட்டு தன்னுடைய மகளை காப்பாற்றுமாறு கதறி அழுதுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் கிணற்றில் மூழ்கி சிறுமி கிருபாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சென்ற ஆரணி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் சிறுமியின் உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை ரகு கிணற்றில் இறங்கி சிறுமியை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, சிறுமியை சடலமாக கிணற்றில் இருந்து எடுத்தனர்.

இறந்த சிறுமியின் உடலை உடற்கூராய்வுக்காக எடுத்து செல்ல, தகவல் கொடுத்து 2மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்பதால் சிறுமியின் உடலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தந்தை ரகு நடந்தே தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்கு எடுத்து சென்றார்.

அந்த காட்சி நெஞ்சை உலுக்குவது போல் இருந்தது. சிறுமி இறந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments