மருத்துவமனையில் புகுந்து செல்போன், பணத்தைக் கொள்ளையடித்த முகமூடி கும்பல்... கன்னியாகுமரியில் அட்டூழியம்!

0 2450
டி டி மருத்துவமனை

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து அடித்து நொறுக்கி பணத்தைக் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் செல்போன்களை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில், விஜயகுமாரி என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தில், டேவிட் என்பவர் டி.டி மருத்துவமனை எனும் பெயரில் முதுகு தண்டுவட சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். டேவிட்டுக்கும் விஜய்குமாரியின் உறவினரான ஷியாம் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றிரவு 11.45 மணியளவில் ஷியாம் தலைமையில் 25 - க்கும் மேற்பட்டவர்கள் முகமூடி அணிந்து மருத்துவமனைக்குள் புகுந்தனர். மருத்துவமனை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். அத்துடன் இல்லாமல் அங்கிருந்த மருத்துவ உபகரணங்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மருத்துவமனையில் இருந்த ரூ.62,000 பணத்தைக் கொள்ளையடித்தனர். புறப்படும்போது அங்கிருந்த நோயாளிகள், செவிலியர்கள் அனைவரையும் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களையும் பறித்துச் சென்றனர்.

மருத்துவமனையைக் கொள்ளையடித்தவர்கள் புறப்படும்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்குகளையும் எடுத்துச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவத்தால் மருத்துவர் டேவிட் உயிர் பயத்தில் உள்ளதாகவும் தனக்கு போலீஸ் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த ஷியாம் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மருத்துவமனையிலேயே கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments