சதுரகிரியில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி!

0 16860

மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சமூக இடவெளி சின்னாப்பின்னமாகி போனது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் . இந்த கோயிலுக்கு மாதம் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் மட்டுமே செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்கலாம் என தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, சதுரகிரி கோயிலும் மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 15 - ஆம் தேதி முதல் இன்று வரை 4 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது.

இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து இன்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோயிலில் குவிந்தனர். கொரோனா அச்சம் காரணமாக, கோயில் நிர்வாகம் காலை 7 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே பக்தர்களை கோயிலுக்கு செல்ல அனுமதி அளித்துள்ளது. வெப்ப பரிசோதனை செய்த பின்னரே பக்தர்கள் அனுப்படுகின்றனர். எனினும், பக்தர்கள் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பெரும்பாலான பக்தர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் சமூக இடைவெளி கிஞ்சித்தும் கடைபிடிக்கவில்லை. இந்த கூட்டத்துக்கு இடையே , 'சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்' என்று போலீஸார் மைக்கில் கத்திக் கொண்டிருந்ததும் வேடிக்கையாகவே பார்க்கப்பட்டது. இதனால், விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் அதிகளவில் காவலர்களை ஈடுபடுத்தி சதுரகிரி நோக்கி வருபவர்களை தடுத்திருந்தால் இந்தளவுக்கு கூட்டம் கூடியிருக்கது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments