மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு...

0 2449
மகாளய அமாவாசையையொட்டி தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு...

மகாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். 

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி திதி கொடுத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. அங்கு வந்திருந்த வெளியூர் பக்தர்கள் கிழக்கு ராஜா கோபுரம் அருகே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

தடையை மீறி ஓலைக்குடா கடற்கரை பகுதியில் ஒரு சிலர் புனித நீராடினர். அக்னி தீர்த்தக் கடற்கரை பக்தர்கள் இன்றி வெளிச்சோடி காணப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மயிலாப்பூர்:

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் குளக்கரையில் அதிகாலை முதலே ஏராளமானோர் வந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். வெற்றிலை பாக்கு, பழம், தேங்காய், அகத்திக்கீரை மற்றும் எள் போன்றவற்றை படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தனிநபர் இடைவெளியின்றி ஒரே இடத்தில் ஏராளமானோர் கூடியதால், பாதுகாப்பு கருதி, வீட்டிலேயே திதி கொடுத்து வழிபாடு நடத்தக்கூறி சிலரை போலீசார் திருப்பி அனுப்பினர்.

சேலம்:

மேட்டூர் அணை அடிவாரம் காவிரி ஆற்றில் சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் வந்து புனித நீராடி வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க எள் பிண்டத்தை ஆற்றில் கரைத்து திதி கொடுத்தனர். இதே போன்று அணைமேடு பகுதிக்கு குடும்பத்தினருடன் வந்த மக்கள் தனிநபர் இடைவெளியின்றி, முகக்கவசம் அணியாமல் வழிபாடு நடத்தினர். அமாவாசையை முன்னிட்டு திரளானோர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க வந்ததால் அங்கு கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

வேதாரண்யம்:

மகாளய அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலில் மக்கள் புனித நீராடி பச்சரிசி, தேங்காய், காய்கறிகள் ஆகியவை வைத்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்களே வந்திருந்தனர்.

திருத்தனி:

திருத்தனி முருகன் கோயில் மலை அடிவார சரவண பொய்கை தெப்பக்குளத்தில் 500-க்கும் மேற்பட்டோர் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். தனிநபர் இடைவெளியை பொதுமக்கள் பின்பற்றவில்லை. இதே போன்று, தடையை மீறி வீரராகவப் பெருமாள் கோயிலிலும் ஆயிரக் கணக்கிலான பக்தர்கள் குவிந்தனர்.

தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும் மூன்று நதிகள் ஒன்றாக சங்கமிக்கும் கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் புனித நீராடி தர்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், சுவாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கொண்டு வரும் பூ, பழம் மற்றம் தேங்காய்களை கோயிலுக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தடையையும் மீறி பக்தர்கள் சிலர் ஆற்றில் புனித நீராடி வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திதி கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments