சென்னையில் சிகிச்சையில் மொத்தமே 9833 கொரோனா நோயாளிகள்... நல்ல காலம் தொடங்குகிறதா?
கொரோனா தொற்றில் உச்சத்தைத் தொட்ட சென்னை மாநகரத்தில், கடந்த இரண்டு நாள்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையத் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்து சென்னை நகரில்தான் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தது. நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் எண்ணிக்கை 24,000 வரை தொட்டது. ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்து, கடந்த இரண்டு நாள்களில் பத்தாயிரத்திற்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகின்றனார்.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 9,437 ஆக இருந்தது. உச்சகட்டமாக, ஊரடங்கு அமலில் இருந்த ஜூலை மாதம் மத்தியில் 24,890 பேர் சென்னையில் மட்டும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
ஆனால், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட், செப்டம்பர்மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 9883 ஆகக் குறைந்தது. கடந்த இரண்டு தினங்களாக சென்னை மாநகர் முழுவதும் பத்தாயிரத்திற்கும் குறைவான கொரோனா நோயாளிகளே உள்ளனர்.
இதுவரை சென்னையில் 1,51,560 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 1,38,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் பாதிப்புக்கு உள்ளாகி 3,013 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது 9833 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக பத்தாயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னை மாநகரில் தினமும் பத்தாயிரம் கொரோனா பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இ ஆயிரத்துக்கும் அதிகமாக புதிய தொற்றுகள் பதிவாகின்றன. அதே நேரம் கொரோனா நோய் சிகிச்சை பெற்று குணமடந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகமானது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் விகிதத்தை விடவும் குணமடைந்தோர் விகிதம் அதிகமானதால் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இது குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளரும் தமிழக மருத்துவ நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ள பிரதீப் கவுர் கூறுகையில், “சோதனையை அதிகப்படுத்தியது, கொரோனா தொற்று தொடர்பாளர்களைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியது, காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் தான் சென்னையில் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முககவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கை கழுவுதல், போன்றவை நல்ல பயனைக் கொடுத்துள்ளது. இதைத் தொடரும் பட்சத்தில் கொரோனா பரவல் வேகம் கணிசமாகக் குறையும்'' என்கின்றர் மருத்துவர்கள்.
ஆகஸ்ட் மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் கொரோன தொற்று சென்னையில் அதிகரிக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்துவருவது புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது நோய்த் தொற்றை விரைவில் வென்றுவிடலாம் எனும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
சென்னையில் குறைந்துவரும் கொரோனா பாதிப்பு..! #Chennai | #Corona | #Covid19 https://t.co/wUFQFa0rQo
— Polimer News (@polimernews) September 17, 2020
Comments