சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு..!
சென்னை ராயபுரத்தில் கடத்தப்பட்ட கூலித் தொழிலாளியின் இரண்டரை வயது பெண் குழந்தையை 60க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையைக் காட்டி வேலை கேட்பதற்காக அதனை கடத்திச் சென்ற அஸ்ஸாமைச் சேர்ந்த இளைஞனை தேடி வருகின்றனர்.
சென்னை ராயபுரம் ரயில்நிலையம் அருகே தற்காலிக குடியிருப்பில் தங்கி கொத்தனார் வேலை செய்து வரும் பப்லு என்பவரது இரண்டரை வயது குழந்தை மர்ஜினா. பப்லுவுக்கு அண்மையில் அறிமுகமான சுனில் என்ற இளைஞன், கடந்த ஆறாம் தேதி குழந்தைக்கு உணவு வாங்கித் தருவதாக தூக்கிச் சென்று தலைமறைவானான். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணையில் இறங்கிய ராயபுரம் போலீசார், 60க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததோடு, சுனிலின் புகைப்படத்தை ரயில் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் ஒட்டினர்.
இதனிடையே பப்லு வீட்டில் சுனில் விட்டுச் சென்ற துணிப்பை ஒன்றில் இருந்து அஸ்ஸாமைச் சேர்ந்த ஒருவரது செல்போன் எண் கிடைத்தது. அந்த எண்ணில் பேசிய நபர், சரிவர பதிலளிக்காமல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிடவே அஸ்ஸாம் மாநில போலீசாருக்குத் தகவல் தெரிவித்து, அந்த நபரை தொடர்பு கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் தங்களது உறவினர்கள் பலர் கட்டிட வேலை செய்து வருவதாகவும் அவர்களோடு பேசும்போது சுனில் பழக்கம் என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். அவரை உறவினர்களிடம் பேசவைத்து விசாரித்தபோது, குழந்தை மர்ஜினா அங்கிருப்பது உறுதியானது.
போலீசார் வருவதை அறிந்த சுனில் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகி இருக்கிறான். குழந்தை மர்ஜினாவை மீட்ட போலீசார், அதனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 10 நாட்கள் கழித்து குழந்தையைப் பார்த்த அதன் தாய் கண்ணீரோடு ஓடிவந்து அதனைத் தூக்கிக் கொண்டு போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
ஆதார் அட்டை உட்பட ஆவணங்கள் எதுவும் இல்லாததால் சுனிலுக்கு வேலை கொடுக்க யாரும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையோடு உணவுக்கு வழியில்லாமல் தவிப்பதாகக் காண்பித்து வேலை வாங்கவே, அவன் மர்ஜினாவை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments