இந்தோனேஷியாவில், ஆன்லைனில் கல்வி கற்க வீதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து விற்கும் மாணவர்கள்
இந்தோனேஷியாவில், ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவைப்படும் சாதனங்கள் வாங்கவும் இன்டர்நெட் கட்டணம் செலுத்தவும் மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து விற்று வருகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று பரவலால், மற்ற நாடுகளைப் போல இந்தோனேஷியாவும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தோனேசியாவில் இதுவரை 2,25,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9000 - க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகின்றனர்.
ஆனால், ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஆறில் ஒருவர் வீட்டில் மட்டுமே இணையதள சேவை உள்ளது. பல ஏழை மாணவர்கள் வீட்டில் மொபைல் போன்கள் கூட இல்லாமல் அவதிப்படுகின்றனர். கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டு ஏழை மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், எப்படியாவது பாடம் கற்றே ஆக வேண்டும் என்று உறுதிகொண்ட ஏழை மாணவர்கள் வீதி மற்றும் குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களைச் சேகரித்து விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் இணையதள சந்தா செலுத்தி பாடம் கற்று வருகின்றனர்.
இரண்டு மாதங்களாகக் குப்பை பொறுக்கி விற்று வரும் திமாஸ் அன்வர் எனும் 15 வயது மாணவன், “எங்கள் வீட்டில் இணையதள வசதி இல்லை. அதனால், குப்பைக் கூடங்களில் பிளாஸ்டிக் சேகரித்து விற்று நானும் என் நண்பனும் இணையதள சந்தா கட்டுகிறோம்” என்று கூறியுள்ளான்.
Comments