பிரீத் அனலைசரும் - கொரோனா ஆபத்தும்..!

0 1886

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்க போலீசார் பிரீத் அனலைசர்களை பயன்படுத்துவதால், கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு சுமார் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும் தனிமனித விலகலை கடைப்பிடித்து நோய் பரவும் சூழலை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. இது ஒரு புறமிருக்க, கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் துறையே நோய் பரவும் சூழலை உருவாக்குகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரவு நேரத்தில் மதுபோதை வாகன ஓட்டிகளை பிடிக்க, ப்ரீத் அனலைஸர் கருவியை பயன்படுத்த சென்னை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், உத்தரவிட்டுள்ளனர். சோதனையில் ஈடுபடும் போலீசார் முக கவசம், கையுறை அணிந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வதில்லை.

மது போதையை அளவிடும் ப்ரீத் அனலைசர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் வாகன ஓட்டிகள் வாய் வைத்து ஊதினால் மட்டுமே மது போதையை கண்டறிய முடியும். அவ்வாறு நடக்கும் சோதனையில் ஒருவருக்கு தொற்று இருந்தாலும் கூட, அந்த குழாயாய் மாற்றும் போக்குவரத்து போலீசார் மூலம் மற்றவருக்கும் நோய் பரவும் சூழல் உள்ளது.

இதனால் ஏற்படும் அச்சம் காரணமாக சோதனைக்கு வாகன ஓட்டிகள் மறுத்தால், மது அருந்தியதால் தான் மறுக்கின்றீர்களா என போலீசார் வற்புறுத்தி சோதனைக்கு உட்படுத்துவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

நோய் தொற்றும் சூழலில் இந்த சோதனை அவசியமானது தானா என்ற கேள்விக்கு, மது கடைகள் திறக்கப்பட்டதால் அதிகரித்துள்ள மதுபோதை விபத்துகளை தவிர்க்கவே சோதனை நடத்தப்படுவதாக காவல்துறையினர் பதில் கூறுகின்றனர்.

நோய் தொற்று சூழலை தவிர்க்கும் வகையில் contact less சோதனையை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதுவரை கொரோனாவுடன் கண்ணாமூச்சி ஆடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சமூகம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments