டிக்டாக்குக்குப் போட்டி... டிக்டாக்கின் இருபதுகோடி வாடிக்கையாளர்களைக் குறிவைக்கும் கூகுள்!
இந்தியாவின் இருபது கோடி டிக்டாக் வாடிக்கையாளர்களைத் தன்பக்கம் இழுக்கும் வகையில், கூகுள் நிறுவனம் யுடியூப் சார்ட்ஸ் ((YouTube Shorts)) என்னும் பெயரில் புதிய வீடியோ பகிர்வு செயலியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
லடாக் எல்லையில் சீனா நாட்டுடன் நடந்த மோதலையடுத்து டிக்டாக், ஷேர்இட், ஹலோ உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளை இந்தியா தடை செய்தது. இந்தத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டது டிக்டாக் தான். ஏனெனில், இந்தியாவில் மட்டும் டிக்டாக் இருபதுகோடி பயன்பாட்டாளர்களை கொண்டிருந்தது. இந்தத் தடையால் ரூ. 45, 000 கோடிக்கும் மேல் டிக்டாக் செயலியின் தாய் நிறுவனமாக பைட் டான்ஸ் நஷ்டமடைந்தது.
டிக்டாக் செயலியின் இருபது கோடி பயனர்களைக் குறிவைத்து பல்வேறு நிறுவனங்களும் புதுப்புது செயலிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. டிக்டாக்கைப் போலவே ரீல்ஸ் எனும் பெயரில் இன்ஸ்டாகிராம் (Instagram expanded Reels) புதிய வீடியோ பகிர்வு சமூகவலைத்தளத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியாவிலும் சிங்காரி, மித்ரன் உள்ளிட்ட செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த சூழலில், கூகுள் நிறுவனமும் தற்போது யுடியூப் சார்ட்ஸ் வீடியோ பகிர்வு தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த செயலியில் 15 வினாடிகள் வரையிலான வீடியோக்களை பகிரமுடியும் . அசத்தலான கேமரா மற்றும் வீடியோ எடிட்டிங் வசதிகளும கூகுளின் புது செயலிலியில் உள்ளது. வெர்டிக்கல் வீடியோக்கள் ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய வசதி விரைவில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிக்டாக் செயலியை விற்க முடியாமல் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் தவித்து வரும் நிலையில், போட்டியாகக் கூகுள் நிறுவனம் யூடியூப் சார்ட்ஸ் என்ற பெயருடன் களமிறங்கியுள்ளதால், டிக்டாக் செயலியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
Comments