தொடாமல் ஒரு யுத்தம், தயாராகிறது தாயகம்..!

0 7948

லேசர் ஒளிக்கற்றைகளை கொண்டு நவீன ஆயுதங்களை உருவாக்கும் பணியை இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய ராணுவம் நவீன சாதனங்களுடன் களத்தில் நிற்கும்.

அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இஸ்ரேல் போன்ற நாடுகள் இப்போது எதிரி நாட்டு ராணுவத்தை தொடாமலேயே வீழ்த்தும் நவீன ஆயுதங்களை உருவாக்குவதில் வெற்றி கண்டுள்ளன. இப்போது இந்திய ராணுவமும் இந்த பாதையில் இறங்கி உள்ளது. இதே போன்று இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. ராணுவத்திற்கான தேசிய திட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளது.

இதன்படி டி.இ.டபிள்யூ என்ற நேரடி சக்தி ஆயுதங்களை உருவாக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ ஈடுபட்டுள்ளது. அதிக சக்தி வாய்ந்த லேசர் அல்லது அதிக சக்தி கொண்ட நுண் கதிர்களை பயன்படுத்தி இந்த ரக ஆயுதங்கள் தயாரிக்கப்பட உள்ளன. குறைந்த, நடுத்தர, நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் இந்த ஆயுதங்களை டி.ஆர்.டி.ஓ. உருவாக்கி வருகிறது. அதிகபட்சமாக 100 கிலோ வாட் சக்தி கொண்ட ஆயுதங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்களை கூட வீழ்த்தும் வலிமை வாய்ந்த ஆயுதங்களை உருவாக்க டி.ஆர்.டி.ஓ. திட்டமிட்டுள்ளது.

அடுத்து வரும் மாதங்களில் இந்த ஆயுதங்களை பரிசோதித்து பார்க்கும் பணி நடைபெற உள்ளது. லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து இந்த ரக ஆயுதங்களை தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஆளில்லா குட்டி விமானங்களை வீழ்த்தும் வகையில் இரு ஆயுதங்களை டி.ஆர்.டி.ஓ உருவாக்கி உள்ளது. இதில் ஒன்று டிரைலருடன் கூடியது.

இது 10 கிலோ வாட் லேசர் கதிரை வீசும் திறனும், 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை அழிக்கும் வல்லமையும் கொண்டது. மற்றொரு ஆயுதம், டிரைபேடில் இருந்து ஏவக்கூடியது. இது 2 கிலோ வாட் சக்தியும், 1 கிலோ மீட்டர் தூர இலக்கை அழிக்கும் வல்லமையும் கொண்டது. இவற்றை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரு கருவிகளையும் டி.ஆர்.டி.ஓ. வெற்றிகரமாக பரிசோதித்து பார்த்துள்ளது.

இந்த இரு கருவிகளும் எதிரிகளின் டிரோன்களின் சிக்னல்களை முடக்கியோ, அல்லது அவற்றின் உள்கட்டமைப்பை சேதப்படுத்தியோ அழிக்கும் திறன் கொண்டவை.
இந்நிலையில் இந்திய விமானப்படை இப்போது எதிரிகளின் சிறிய ரக வான் இலக்குகளை தகர்க்க உதவும் 20 லேசர் கருவிகள் தேவை என தெரிவித்துள்ளது.

இதில் 6 முதல் 8 கிலோ மீட்டர் தூர இலக்குகளை தாக்கும் கருவிகளை முதற்கட்டமாகவும், 20 கிலோ மீட்டர் தூர இலக்குகளை தாக்கும் கருவிகளை அடுத்த கட்டமாக உருவாக்க வேண்டுமென விமானப்படை தெரிவித்துள்ளது. இதே போல 6 முதல் 8 கிலோ மீட்டர் தூர இலக்குகளை தாக்கும் 20 கருவிகளை முதற்கட்டமாகவும், 15 கிலோ மீட்டர் தூர இலக்குகள் தாக்கும் கருவிகளை அடுத்த கட்டமாகவும் உருவாக்கி தர வேண்டுமென ராணுவமும் கூறியுள்ளது.

ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவும் இந்த ரக நவீன ஆயுதங்கள் தான் இனி இந்திய ராணுவத்திற்கு தேவை என கூறியுள்ளார். இதையடுத்து லேசர் ஆயுதங்களை உருவாக்கும் பணியில் டி.ஆர்.டி.ஓ. தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments