திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மீது பாரதிராஜா குற்றச்சாட்டு
திரைப்பட ரிலீஸ் விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அடாவடியாக செயல்படுவதாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளை திருமண மண்டபங்களாக மாற்றினாலும் தங்களுக்கு கவலை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க புதிய அலுவலகத்தை பாரதிராஜா திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரைப்படங்கள் அனைத்தையும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதுதான் தயாரிப்பாளர்களின் விருப்பம் என்றும், ஆனால் இதில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அடாவடியாக தங்களுக்கு மட்டும்தான் படங்களை அளிக்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
திரையரங்குகளில் திரைப்படம் திரையிட முடியாத நிலை உள்ளதாகவும், அப்படியிருக்கையில் அத்திரையரங்குகள் கல்யாண மண்படங்களாகவோ, மாநாடு நடத்தும் இடமாகவோ மாற்றப்படுவது குறித்து கவலையில்லை என்றும் பாரதிராஜா கூறினார்.
நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் ஊதியம் அளித்துவிட்டு, அதனால் ஏற்படும் சுமையை படத்தை ரிலீஸ் செய்யும்போது திரையரங்குகள் மீது தயாரிப்பாளர்கள் வைப்பதாக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, நடிகர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்களுக்கு தெரியும் என்றார்.
அதிக உறுப்பினர்களைக் கொண்ட தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தால் செய்ய முடியாததை புதிய சங்கமான தமிழ்நாடு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தால் செய்ய முடியுமா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பாரதிராஜா, தங்கள் சங்கத்தில் 50 பேர் இருந்தாலும், 50 பேரும் பயில்வான்கள் என்றும், ஆனால் எத்தனை ஆயிரம் பேரை கொண்டிருந்தாலும் தென்னிந்திய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்போர் நோஞ்சான்கள் என்றும் பதிலளித்தார்.
Comments