நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடக்கம்
கொரோனா பரவல் காரணமாக முதல்நாளான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்களவையும், மதியம் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மாநிலங்களவையும் நடைபெறுகிறது.
நாளை முதல் காலை மாநிலங்களவையும், மதியம் மக்களவையும் நடைபெறவுள்ளது. முதல்நாளான இன்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகி உள்ளிட்டோருக்கு எம்பிக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மக்களவை ஒரு மணி நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.’
முன்னதாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற பணியை எம்பிக்கள் ஆற்றுவதாகவும், இதற்கு தனது பாராட்டுதலை தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் ஒட்டுமொத்த நாடும் இருக்கிறது என்ற செய்தியை எம்பிக்கள் தெளிவாக தெரியபடுத்துவர் என நம்புவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் வென்றால், உலகையே கொரானாவின் பிடியில் இருந்து விடுவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா பரவல் போன்ற காரணத்துக்காக மாநிலங்களவையில் முதன்முறையாக மக்களவை கூட்டம் நடத்தப்பட்டது. எம்பிக்களின் வருகையும் முதன்முறையாக செயலி மூலம் பதிவிடப்பட்டது.
ஒரு மணி நேர ஒத்திவைப்புக்கு பிறகு அவை மீண்டும் கூடியதும் மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி பேசினார். அப்போது அவர், கொரோனாவை காரணமாக காட்டி கேள்வி நேரம் நீக்கம் செய்யப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றார். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜீரோ ஹவர் நேரத்தின்போது அரை மணி நேரம் கேள்விகளை கேட்கலாம் என்றார்.
இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்கள் அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதா, விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் அளித்தல் மற்றும் விவசாய சேவைகள் தொடர்பான மசோதா விவசாயிகளின் வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பது தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மசோதா, எம்பிக்கள் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான மசோதா ஆகியவற்றை அரசு அறிமுகம் செய்தது. பின்னர் மதியம் 1 மணி ஆனதையடுத்து அவை நாளை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
Comments