கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கூடுகிறது நாடாளுமன்றம்.. 45 மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்..!

0 1199

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் 45 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக்கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. அக்டோபர் முதல் தேதி வரை சனி-ஞாயிறு விடுமுறையின்றி 18 அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை மாலை என மக்களவையும் மாநிலங்களைவும் இரண்டு தனி அமர்வுகளாக நடைபெற உள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட மறைந்த எம்பிக்களுக்கு இன்றைய கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்படும்.

வங்கி சீர்திருத்த மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 45 மசோதாக்களை இக்கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும், நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக 11 அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்றாக மசோதாக்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக உறுப்பினர்கள் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 5 எம்பிக்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்றைத் தவிர்க்க நாடாளுமன்ற வளாகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உடல்நிலை காரணமாக இக்கூட்டத் தொடரில் சோனியா பங்கேற்க மாட்டார் எனவும், ராகுல், மன்மோகன்சிங் ஆகியோரும் இத்தொடரில் கலந்து கொள்ளவாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே, நாளை நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில் இந்திய சீன அசல் எல்லைக் கோடு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments