பெரு நெருப்பால் பேரழிவு... ஒரே மாதத்தில் 24 பேர் பலி

0 1817

அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி கடந்த ஒருமாதத்தில் மட்டும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரேகான் மாகாணத்தில் உள்ள மக்கள் தொகையில் 10 விழுக்காடுக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த மாதம் பற்றிய காட்டுத் தீ தற்போது ஒரேகான் மற்றும் வாஷிங்டன் பகுதிகளுக்கும் பரவியுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், ஆயிரக்கணக்கான வீடுகளையும் சுட்டெரித்து சாம்பலாக்கிய வனத்தீயின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெருப்பினால் ஏற்பட்ட புகையால் அங்கு சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்களுக்கும் அப்பால் புகை மண்டலத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் பல நாட்களாக வானம் ஆரஞ்சு நிறமாகக் காட்சியளிக்கிறது. 

நெருப்பில் சிக்கி கலிபோர்னியாவில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரேகான் மற்றும் வாஷிங்டன் மாகாணங்களில் குறைந்தது 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டன் பகுதியில் குடியிருப்புகளை நெருப்பு சூழ்ந்ததால் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஒரேகான் மாகாணத்தில் காட்டுத் தீயால் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சாம்பாலாகின. இதனால் அப்பகுதி ஆட்கள் நடமாட்டமின்றி மயான அமைதியாகக் காட்சியளிக்கிறது.

பெருந் தீயைக் கட்டுப்படுத்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் வனப்பகுதிக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரேகான் மாகாணத்தில் வசிப்பவர்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோரை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments