18 கிலோ கடத்தல் தங்கம் செய்கூலிக்கு ஆசைப்பட்டு சேதாரமான நகைகடை அதிபர்..!
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான சொப்னா, கோவையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளரிடம் 18 கிலோ தங்கம் விற்றுள்ளதை தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பவிழம் வீதியில் கடத்தல் தங்கத்தில் ஜொலித்த நகைக்கடைகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது .
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் பார்சல்களை வரவழைத்து 100 கிலோவுக்கும் அதிகமாக தங்க கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்குள்ளான தூதரக ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்வப்னா கடத்தல் தங்கத்தை யார் யாருக்கு சப்ளை செய்தார் என்பது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கோவை பவிழம் வீதியில் ஸ்ரீ செந்தூர் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடையுடன் நகை பட்டறையும் நடத்திவரும் நந்தகோபால் என்பவரிடமும் கடத்தல் தங்கத்தின் ஒரு பகுதியை கைமாற்றி விட்டதை ஒப்புக் கொண்டார்.
ஸ்வப்னா அளித்த தகவலின் பேரில் கோவையில் நகை பட்டறை உரிமையாளர் நந்தோபால் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ஸ்வப்னா சம்பந்தப்பட்ட பல்வேறு வியாபார தொடர்புகள் குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து நகைப் பட்டறை உரிமையாளர் வீட்டில் இருந்து சில தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து நந்தகோபாலை விசாரணைக்காக திருவனந்தபுரம் அழைத்து சென்றனர்.
ஸ்வப்னா சுரேஷ் கடந்த சில மாதங்களில் மட்டும் நந்த கோபாலுக்கு 18 கிலோ கடத்தல் தங்கத்தை கைமாற்றி விட்டது தெரியவந்துள்ளது. அந்த தங்க கட்டிகளை ஸ்ரீ செந்தூர் ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் சீல் அச்சிட்டு நகைகளாக செய்து பல்வேறு நகைக்கடைகளுக்கு விற்று விட்டதாக நந்த கோபால் தெரிவித்துள்ளார். அதன் மதிப்பு 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் கடத்தல் தங்கத்தின் மூலம் ஆபரணங்களை வாங்கிய நகைகடைகளின் பெயர்ப் பட்டியலை தயார் செய்து வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அங்கும் சோதனை நடத்தி நகைகளைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
இந்த தகவல் வெளியான நிலையில் நந்தகோபாலிடம் தங்க நகைகளை வாங்கிய நகைக் கடை உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
நகை வியாபாரம் செய்பவர்கள் நேர்மையாக செய்யாமல் கடத்தல் தங்கத்தை நம்பி தொழில் செய்தால் இப்படித்தான் ஒவ்வொரு நொடியும் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக மாறி இருக்கின்றது.
Comments