தள்ளாடும் அரசு மருத்துவமனைகள்- பணக்குவிப்பில் தனியார் மருத்துவமனைகள்
சேலத்தில் அரசு மருத்துவமனையில் நிலவும் இட நெருக்கடியையும் படுக்கை பற்றாக்குறையையும் பயன்படுத்தி, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து அங்கு வென்டிலேட்டர்களை பொருத்தி கொரோனாவுக்கு சிகிச்சை என்று லட்சங்களை குவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசு தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே அதிக நோயாளிகள் கொரோனா சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும், மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இருந்தும் காலியாக காணப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் 100 படுக்கைகளுக்கும் மேலாக காலியாக உள்ள நிலையில், அங்குள்ள மருத்துவர்கள் தங்களிடம் வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி மோகன் குமாரமங்கலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர். இதே நிலைதான் மற்ற தாலுகா மருத்துவமனைகள் மற்றும் தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனால் தலைமை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்து பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பும் சூழ்நிலை நிலவி வருவதாகவும், மருத்துவ மனையில் இடநெருக்கடியுடன் நோய் பரவும் சூழலும் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
சேலத்தில் இயங்கும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள், சாதாரண தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து அங்கு வெண்டிலேட்டர்களை பொருத்தி கொரோனாவுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தனியாரால் தங்கும் விடுதிகளில் சுவாசக் கருவிகளை பொருத்தி கொரோனா சிகிச்சை மேற்கொள்ள முடிகிற போது, மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் சுவாசகருவிகளுடன் கூடுதல் படுக்கை வசதிகளை சுகாதாரதுறையினர் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
மேலும் கிராமங்கள் தோறும் முழுவதும் மருத்துவ முகாம் நடத்தும் சுகாதாரதுறையினர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் அறிகுறிகளுக்கு ஏற்ப அவர்களை பிரித்து மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளுக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கடுமையான மூச்சுத்திணறலால் அவதிப்படும் நோயாளிகளை மட்டும் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினால் தனிக்கவனத்துடன் சிறப்பான சிகிச்சை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை அறிகுறிகள் இல்லாத மற்றும் குறைந்த அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளித்துவரும் மாவட்ட தாலுகா மருத்துவமனைகள் பக்கமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தங்கள் பார்வையை திருப்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments