"காங். ஆதரவு சிவசேனா அரசால் நான் படும் துயரம் தெரியவில்லையா" - சோனியா மீது கங்கணா பாய்ச்சல்
மராட்டிய காங்கிரஸ் ஆதரவு கூட்டணி அரசால், தமக்கு ஏற்பட்டிருக்கும் இடைஞ்சல் குறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மவுனம் கலைக்க வேண்டும் என, நடிகை கங்கணா ரணாவத் வலியுறுத்தியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை, பாகிஸ்தனோடு தொடர்புபடுத்தி நடிகை கங்கணா தெரிவித்த கருத்தால் ஏற்பட்ட சர்ச்சை, வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. மாநிலத்தை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள சிவசேனா கடுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதால், கங்கணாவுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கங்கணாவின் பங்களாவில் விதிகளை மீறி கூடுதல் கட்டுமானங்கள் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மும்பை பெருநகர மாநகராட்சி இடித்தது. இதற்கு, மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதுதொடர்பாக டுவிட்டரில் இன்று பதிவிட்டுள்ள கங்கணா ரணாவத், ஒரு பெண்ணாக, நான் படும் துயரம் தங்களுக்கு தெரியவில்லையா என்று, சோனியா காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உங்கள் கட்சியின் ஆதரவோடு நடைபெறும் மகாராஷ்டிரா அரசு, புத்திமதி சொல்ல, தங்களுக்கு மனம் வரவில்லையா? என்றும், சோனியாவை கங்கணா வினவியுள்ளார். தாங்கள் வெளிநாட்டில் பிறந்து, இந்தியாவில் வாழும் நிலையில், பெண்களின் துயரம் பற்றி அறிந்திருந்தும், தனக்கு நேர்ந்த துயரம் குறித்து மவுனம் கலைக்காவிட்டால், வரலாறு அதற்கு தகுந்த தீர்ப்பை அளிக்கும் என்றும், சோனியா காந்தியை விமர்சித்து நடிகை கங்கணா ரணாவத், பதிவிட்டுள்ளார்.
Comments