மூளையில் ரத்தகசிவு கை, கால் செயல் இழந்து வடிவேல் பாலாஜி பலி..! பணம் பறித்த மருத்துவமனைகள்

0 221839

சின்னத்திரை மற்றும் சினிமா நகைச்சுவை கலைஞரான வடிவேல் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு பில்ரத் மற்றும் விஜயா மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவை போலவே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தோன்றி சின்னத்திரை ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றவர் சென்னை சேத்பட்டை பூர்வீகமாக கொண்ட வடிவேல் பாலாஜி..!

பிணவறை ஊழியராக இருந்த வடிவேல் பாலாஜி நடிப்பு மீது கொண்ட தீராத ஆசையால் 2008 ஆம் ஆண்டு தனியார் தொலைகாட்சியின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

மியூசிக்கலி, டப்மாஷ், டிக்டாக் போன்றவற்றிலும் அவ்வப்போது தனது திறமையை காட்டி ரசிகர்களை சிரிக்கவைத்தார்.

மேடை நிகழ்ச்சிகளிலும், டிவி தொடர்களிலும் , திறமையை நிரூபித்த வடிவேல் பாலாஜி குலசேகரப்பட்டினம் தசரா விழாவிலும் நடனமாடி கலகலப்பூட்டியவர்.

பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய வடிவேல்பாலாஜி, யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் இன்றி வீட்டுக்குள் முடங்கி இருந்த வடிவேல் பாலாஜிக்கு இரு வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக முதலில் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் அங்கிருந்து பில்ரத் மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர்.

2 நாள் சிகிச்சைக்கு சுமார் இரண்டரை லட்சம் ரூபாயை வசூலித்த பில்ரத் மருத்துவமனை நிர்வாகம் வடிவேல் பாலாஜியை மேல் சிகிச்சைக்காக வடபழனியில் பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனமான விஜயா புரடக்ஷன்ஸ் நடத்தி வரும் விஜயா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

வடிவேல் பாலாஜி நலம் பெற்று வருவதாக கூறி 8 நாட்கள் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் வரை வசூலித்த பின்னர் விஜயா மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவால், கை கால் மற்றும் வாய் செயல் இழந்து விட்டது அதனால் அழைத்து சென்று விடுங்கள் என்று கையை விரித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் வடிவேல் பாலாஜியின் உறவினர்கள் மட்டுமே செய்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் மேற்கொண்டு அதிக அளவு பணம் செலவு செய்ய இயலாத நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வடிவேல் பாலாஜியை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வடிவேல் பாலாஜி உயிரிழந்தார்.

இதற்கிடையே தனது மகன் வடிவேல் பாலாஜியின் மரணத்துக்கு விஜயா மருத்துவமனை மருத்துவர்கள் சொன்ன பொய்கள் தான் காரணம் என அவரது தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடிவேலு பாலாஜியின் மரணத்திற்கு அவருடன் பணிபுரிந்த பல்வேறு கலைஞர்களும், ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர்.

சினிமாவிலும் பல்வேறு மேடைகளிலும் ஆடி, பாடி, காமெடி செய்து ரசிகர்களை எல்லாம் கவலை மறந்து சிரிக்கவைத்த நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜியின் கடைசி நாட்கள் பேசவும், நடக்கவும் இயலாத வலி நிறைந்த நாட்களாக மாறிப்போனது தான் உச்சகட்ட சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments