ஜெயராஜ், பென்னிக்ஸ்.... வளர்த்தவர்கள் இறந்த பின்பும் வாசலில் காத்திருக்கும் செல்லப்பிராணி!
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இரண்டரை மாதங்களாகப் பூட்டிக் கிடந்த செல்போன் கடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னைப் பாசமாக வளர்த்த பென்னிக்ஸிற்காக கடை வாசலிலேயே காத்திருக்கும் நாய் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை கடந்த ஜூன் மாதம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு போலீசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் மரணமடைந்தனர். இருவரின் மரணத்துக்கும் போலீசார் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறந்ததால் அவர்கள் நடத்தி வந்த செல்போன் கடை இரண்டு மாதங்களாகத் திறக்கப்படாமல் புட்டியே கிடந்தது.
இந்த நிலையில், ஜெயராஜின் உறவினரான இம்ரான் மற்றும் இம்ரான் மனைவி மும்தாஜ் ஆகியோர் கடையைத் திறந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கடையைப் பார்த்த பென்னிக்ஸ் வளர்த்து வந்த நாய் கடைக்கு ஓடி வந்தது. பென்னிக்ஸ் கடைக்கு வராத நிலையில் அவருக்காகக் கடை வாசலிலேயே காத்திருக்கிறது. கடை வாசலில் அமர்ந்துள்ள நாய் அடிக்கடி தலையைத் திருப்பி கடைக்குள் இருப்பது பென்னிக்ஸ் தானா என்று பார்ப்பது காண்போர் அனைவரையும் கலங்கச் செய்வதாக உள்ளது.
இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் வளர்ப்பு எஜமானரைத் தேடும் செல்லப் பிராணிக்கு யார் சொல்வது, மரணித்தவர்கள் யாரும் திரும்பி வரப்போவதில்லை என்று!
Comments