கடன் தள்ளி வைத்த காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் விரிவான உறுதிமொழிப் பத்திரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவு
வங்கிக் கடன் திருப்பிச் செலுத்துவதைத் தள்ளி வைத்த காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்யக் கோரிய வழக்கில் விரிவான உறுதிமொழிப் பத்திரத்தை இரு வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்திய வங்கிகள் சங்கத்தின் வழக்கறிஞர் இது தொடர்பாக அரசு எந்த உறுதியான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
இது குறித்து வங்கிகளிடம் பேச்சு நடத்த வேண்டியுள்ளதால் விசாரணையை இருவாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து விரிவான உறுதிமொழிப் பத்திரத்தை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 28ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
Comments