கங்கணா vs சிவசேனா முற்றும் மோதல்
தனது அலுவலகத்தை இடித்ததைப் போலவே மகாராஷ்டிரா முதலமைச்சரின் ஆணவமும் அழிக்கப்படும் என்று நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த கங்கணா, மும்பை போலீசாரை விமர்சித்ததுடன், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
அதற்கு மாநில உள்துறை அமைச்சர் மற்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். மும்பையில் கங்கணா வசிக்க தகுதியில்லை என்று காட்டமாக பேசியிருந்தனர்.
இந்த நிலையில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள கங்கணாவின் அலுவலகம் முறைகேடாக கட்டியிருப்பதாக அறிவித்து, சிவசேனாவின் கட்டுப்பாட்டில் உள்ள மும்பை மாநகராட்சி அதிகாரிகள் திடீரென காலையில் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தனது அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட கங்கணா, இது ஜனநாயகத்தின் மரணம் என்று சாடியுள்ளார். தனக்கு மிரட்டல் வருவதாகவும், அடுத்து தனது வீட்டையும் இதைப் போல இடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது அலுவலகத்தை இடித்ததைப் போலவே மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் ஈகோவும் அழிக்கப்படும் என்று அவர் விமர்சித்துள்ளார். வாழ்ந்தாலும் இறந்தாலும், உத்தவ் தாக்கரே மற்றும் கரண்ஜோகரை அம்பலப்படுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கங்கணாவின் கட்டிடம் இடிக்கப்பட்டதற்கு முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இமாச்சலப் பிரதேச மாநிலம் மணாலியில் இருந்து, கங்கணா ரணாவத் மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு எதிராக சிவசேனா கட்சியினர் ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கங்கணாவுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் கங்கணவிற்கு தான் மிரட்டல் விடுக்கவில்லை என்றும், அவர் மும்பையில் வசிக்கலாம் என்றும் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
Comments