நகைச்சீட்டு பணத்துடன் தப்பி ஓடுவதுதான் கேரளா பேஷனாம்..! ஜுவல்லரியில் அரங்கேறிய மோசடி
தங்க நகை திட்டத்தில் சுமார் 10 கோடி வரை பொதுமக்களிடம் கேரளா பேஷன் ஜுவல்லரி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள அந்நிறுவன உரிமையாளரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சென்னையில் தியாகராயர் நகர், மயிலாப்பூர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் கே.எப்.ஜே எனும் கேரளா பேஷன் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனம் தொடங்கிய தங்க நகை சேமிப்பு திட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பணம் செலுத்தினர். திட்டம் முதிர்வடைந்த பிறகும் பணம் கொடுக்காததால் கடைகளுக்கு சென்று நேரில் பார்த்த போது கடையே காலியாக இருந்தது.
பணம் கட்டிய பொதுமக்களுக்கு நகைகளை தராமல், அடுத்தடுத்து 3 கடைகளும் மூடியதால் விரக்தியடைந்த பொதுமக்கள் காவல் துறையில் புகாரளித்தனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் சுமார் 1,500 பேர் கொடுத்த புகாரில் ரூபாய் 10 கோடி வரை மோசடி செய்துள்ளதாக காவல் துறையின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை காவல் ஆணையரகம் முன்பு குவிந்த பாதிக்கப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர்கள், சுஜித் செரியன், சுனில் செரியன், தன்யா சுஜித், மற்றும் ஆனியம்மா வல்சா செரியன் ஆகியோரை கண்டுப்பிடித்து பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து காவல் ஆணையரக போலீசார் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி புகார் பெற்றனர். பிரபல நடிகர், நடிகைகளை வைத்து தங்க நகை சேமிப்பு திட்டம் என விளம்பரப்படுத்தியதை நம்பி பணம் செலுத்தியதாவும், கே.எப்.ஜே நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து 8 மாதங்களுக்கு மேலாகும் நிலையில் இதுவரை பணத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
தொழில் நஷ்டமடைந்ததாக கூறும் கே.எப்.ஜே நிறுவனத்தின் உரிமையாளர் சுஜித் செரியன் மற்றும் சுனில் செரியன் மற்ற தொழிலில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவின் டிஎஸ்பி ஆதிமூலத்திடம் இது குறித்து கேட்ட போது, அந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு வேறேதும் சொத்துகள், தொழில்கள் இருக்கிறதா என அடையாளம் காணும் பணி நடப்பதாகவும், அவை உறுதி செய்யப்பட்டால் அவற்றை முடக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments