திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் தேர்வு
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர் பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
ஏற்கெனவே துணை பொதுச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 பேர் பதவி வகிக்கும் நிலையில், அந்த எண்ணிக்கையை 5ஆக அதிகரிக்கும் வகையில் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் நாடாளுமன்றம் கூடி அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை தேசிய கல்விக் கொள்கை-2020ஐ நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இருமொழித் திட்டத்திற்கு எதிரான தேசிய கல்விக் கொள்கையை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்கல் அறிக்கை 2020, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ முற்றிலும் நீர்த்துப் போக வைக்கும் எனவும், சுற்றுச்சூழலையும், விவசாயப் பெருமக்களின் வாழ்க்கையையும், வேளாண்மையையும் உருக்குலைக்கும் திட்டங்களை ஊக்குவிக்க அது கொண்டு வரப்பட்டுள்ளது எனவும், ஆதலால் அதை மத்திய அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Comments