காதலை பிரித்த ஈரநிலம்.. ஆசை காதலி கொலை..! சைக்கோ இளைஞன் வெறிச்செயல்
தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் காதலன் குடும்பத்துடனான நீண்டகால நிலத்தகராறு காரணமாக காதலை கைவிட்ட செவிலியரை, உறவுக்கர இளைஞர் வீடுபுகுந்து குத்திக் கொன்ற விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி வள்ளுவர் தெருவை சேர்ந்த முருகேசனின் மகள் கனகா, இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டில் கனகா, தனது சகோதரி ப்ரியாவுடன் பேசிக் கொண்டிருந்த போது வீட்டுக்குள் நுழைந்த உறவுக்கார இளைஞரான மாரியப்பன் என்பவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கனகாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதை கண்டு மிரண்டு போன சகோதரி பிரியா தடுக்க முயன்றுள்ளார் அப்போது அவருக்கும் கையில் கத்திக் குத்து விழுந்துள்ளது.
இதில் பலத்த காயம் அடைந்த கனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். சகோதரி ப்ரியா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக ஆத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்தனர்.
கொலையாளி மாரியப்பனின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சியை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் கொலை நடந்த சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த மாரியப்பன் இருசக்கரவாகனத்தில் தப்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் கொலை தொடர்பாக மாரியப்பனை பிடித்து விசாரித்த போது அவன் சைக்கோ போல காணப்பட்டான், மாரியப்பனின் தந்தை தங்கராஜிம், கனகாவின் தந்தை முருகேசனும் உறவினர்கள்.இவர்களுக்கு இடையே நீண்ட காலமாக பூர்வீக நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகின்றது. பெரியவர்கள் ஒருவருக்கொருவர் முறைத்துக் கொண்டாலும், அத்தை மகன் உறவு என்பதால் மாரியப்பனுடன் செவிலியர் கனகாவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் வீட்டுக்கு தெரியாமல் சில ஆண்டுகளாக செல்போனில் தங்கள் காதலை வளர்த்து வந்தாலும், இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பதால் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்து பெற்றோரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
ஆடுபகை குட்டி உறவா ? என்பது போல முருகேசன் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி தனது காதலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் செவிலியர் கனகா. தனது காதலி தன்னிடம் பேசாததால் கடந்த சில மாதங்களாக சைக்கோ மனநிலையில் சுற்றிய காதலன் மாரியப்பன், ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் செவ்வாய் கிழமை காலையில் வீடு புகுந்து கனகாவை குத்தி கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் நிலத்தகராறில் நடந்த கொலை என்று கூறப்பட்ட நிலையில் விரிவான விசாரணையில் இந்த காதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வழக்கமாக காதலுக்கு சாதியும், மதமும், வசதியும் மட்டுமே எதிரியாக இருக்கும் ஆனால் இங்கே பூர்வீக நிலம் தொடர்பான விவகாரத்தால் பிரிக்கப்பட்ட காதலால் இந்த விபரீத கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கின்றனர் காவல்துறையினர்.
Comments