வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம்... அண்ணா பல்கலை அறிவிப்பு
பொறியியல் மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வை வீடுகளில் இருந்தே எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த இறுதி செமஸ்டர் தேர்வு கொரோனா ஊரடங்கால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வை வரும் 22-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைனில் எழுதலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாணவர்கள் அவரவர் வீடுகளில் இருந்தே கணினி, செல்போன், டேப்லெட் மூலம் கேமிரா மற்றும் ஹெட்போன்கள் உதவியுடன் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதலாம் என்றும், Objective Type வினாத்தாள் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
ஆன்லைன் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், பயிற்சித் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும் என்றும், தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் அறிவுறுத்தல்கள் விரைவில் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தேர்வின் போது மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் கணினி திரையைத் தவிர வேறு எங்காவது திரும்பினாலோ, பார்த்தாலோ முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும், தொடர்ந்து பார்த்தால் Negative Marks வழங்கப்படும் என்றும், மீறினால் தேர்வில் இருந்து வெளியேற்றப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் தேர்வு எழுதும்போது வேறு இணையதளப் பக்கங்களுக்கு செல்லவே முடியாதபடியும் மென்பொருள் வடிவமைக்கப்படுள்ளதாக பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments