அரியர் பாஸ் அறிவிப்புக்கு எதிர்ப்பா ? ஏஐசிடிஇ பெயரில் சுற்றிவரும் போலி இமெயில்
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு ஏஐசிடிஇ அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சலை, தான் வெளியிடவில்லை என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சுற்றிவரும் மின்னஞ்சல் போலியானது என்றாலும், அதில் உள்ள விவரங்களைக் குறிப்பிட்டே ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா பேரிடர் காரணமாக, தேர்வுகளை நடத்த இயலாத சூழலில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வு தவிர்த்து மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆல் பாஸ் என்ற அறிவிப்போடு அரியர் பேப்பர்களிலும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டதால், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில், தேர்வு நடத்தாமலேயே அரியர் பேப்பர்களில் தேர்ச்சி என்பதை ஏற்க முடியாது என ஏஐசிடிஇ மின்னஞ்சல் அனுப்பியதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியிருந்தார்.
ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சியளித்ததற்கு ஏஐசிடிஇ எதிர்ப்பு தெரிவித்து தங்களுக்கு மின்னஞ்சல் எதுவும் வெளியாகவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மறுப்புத் தெரிவித்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு, ஏஐசிடிஇ தலைவர் ஆகஸ்ட் 30ஆம் தேதி அனுப்பியதாகக் கூறப்படும் மின்னஞ்சல் என்று ஒன்று வெளியாகியுள்ளது.
முந்தைய செமஸ்டர்களில் ஃபெயில் ஆன இறுதியாண்டு மாணவர்களுக்கு, தேர்வு நடத்தாமலே அந்த பாடங்களில் பாஸ் என அறிவித்திருப்பது வியப்பைத் தருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த தேர்வும் நடத்தாமல் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதோ, பட்டம் வழங்குவதோ ஏற்க முடியாதது என அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களை தொழில்துறையினரோ உயர்கல்விக்கு வேறு பிற பல்கலைக்கழகங்களோ ஏற்க மாட்டார்கள் என்றும் மின்னஞ்சலில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய அங்கீகாரத்தையே ரத்து செய்வது என்ற நிர்ப்பந்தத்திற்கு ஏஐசிடிஇ ஆளாகக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவிடம் கேட்டபோது, ஏஐசிடிஇ அனுப்பிய மின்னஞ்சல் எதையும் தான் வெளியிடவில்லை என அவர் மறுத்துள்ளார். மின்னஞ்சல் உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்துவது தனது வேலை அல்ல என்று கூறியுள்ள சுரப்பா, அந்த மின்னஞ்சல் உண்மையா என்பதை ஏஐசிடிஇ-யிடம் விசாரித்து சரிபார்க்குமாறும் பதில் அளித்துள்ளார்.
இதனிடையே, ஏஐசிடிஇ தலைவர் அனுப்பியதாக சுற்றிவரும் மின்னஞ்சல் போலியானது, ஃபோட்டோஷாப் ஒட்டுவேலை மூலம் தயாரிக்கப்பட்டது என அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள்தெரிவித்துள்ளன. அதேசமயம், மின்னஞ்சலில் இடம்பெற்றுள்ள அதே விவரங்களைக் குறிப்பிட்டே ஏஐசிடிஇ கடிதம் அனுப்பியிருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியுள்ளன.
Comments