உழவர் உதவித்தொகை முறைகேடு.. தமிழகம் முழுவதும் விசாரணை தீவிரம்..!
உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ், பல்லாயிரக்கணக்கானோர் முறைகேடாக பணம் பெற்றது தொடர்பாக தமிழகம் முழுவதும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் பயன்பெற இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இடைத்தரகர்கள் சிலர், அதிகாரிகளின் உதவியுடன் விவசாயிகள் அல்லாதோரை இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வெங்கடேசன், அஜித், முகிலன் மற்றும் முத்துக்குமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். ரிஷிவந்தியம் வேளாண் உதவி இயக்குநர் ராஜசேகரன், தியாகதுருகம் வேளாண் உதவி இயக்குநர் சுமதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், 7 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் முறைகேடாகப் பணம் பெற்ற 14 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறும் நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், இரண்டு தனியார் கணினி சேவை மைய உரிமையாளர்களான ராகுல் மற்றும் கலையரசனையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர் போலியான கணக்கு மூலம் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து நிதியுதவி 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Comments