மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உறுதியாக வழங்கப்படும் - மத்திய அரசு
ஜிஎஸ்டி வசூல் பற்றாக்குறைக்காக, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
இழப்பீட்டுத் தொகையின் ஒரு பகுதியான 97 ஆயிரம் கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என்றும் எஞ்சிய தொகை, ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் வியாழக்கிழமை அன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்க உள்ள நிலையில், நூறு சதவிகித இழப்பீட்டையும் வழங்க மத்திய அரசு உறுதியாக உள்ளது என நிதி அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு அறிவித்த இரண்டு கடன் திட்டங்களை ஏற்க டெல்லி, பஞ்சாப், கேரளா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகியன மறுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Comments