'ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர் நான்' - போர்டுடன் ஓடிய ஆட்டோவால் அதிர்ந்த கர்நாடகா அரசு!
கர்நாடக மாநிலத்தில் ஐ.ஏ.அஸ் அதிகாரிகள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததால், மன உளைச்சலுக்கு உள்ளான அரசு மருத்துவர் ஒருவர் தனது அரசுப் பணியை உதறிவிட்டுப் தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இத்துடன் நில்லாமல், தன்னை டார்ச்சர் செய்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பழிவாங்கும் விதத்தில், தான் ஓட்டும் ஆட்டோவில், ‘ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்’ என்றும் எழுதிவைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிபுணராகப் பணியாற்றி வந்தவர் மருத்துவர் ரவீந்திரநாத். கொரோனா வைரஸ் பரவலால், பிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிறப்பு கொரோனா வார்டு உருவாக்கப்பட்டது. அந்த சிறப்பு வார்டில் தினமும் பணியாற்றும்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மருத்துவர் ரவீந்திரநாத்திடம் வலியுறுத்தினர். அதற்கு ரவீந்திரநாத் மறுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும், மருத்துவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரவீந்திரநாத்தைக் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்தனர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள். விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பியபோது, அடுத்த நாளே இரண்டாவது முறையாக அவருக்குக் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டது.
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான ரவீந்திரநாத், “நீங்களும் வேண்டாம்... உங்கள் வேலையும் வேண்டாம்” என்று கூறி, அரசுப் பணியை உதறி எறிந்தார் அதற்குப் பிறகு, சொந்த ஊரான தாவணகெரே மாவட்டத்தில் உள்ள பாடெ என்ற கிராமத்துக்குக் குடும்பத்துடன் இடம்பெயர்ந்தவர் ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.
ஆட்டோவின் முகப்பு பகுதியில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில், ’ஐ.ஏ.எஸ் அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவர்’ என்று எழுதிவைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
இதுகுறித்துத் தகவல் அறிந்த கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு, மருத்துவர் ரவீந்திரநாத்தைத் தொடர்புகொண்டார். அப்போது, “உங்களது குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே மீண்டும் பணிக்குத் திரும்பும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
Comments