தப்புவாரா ஜூலியன் அசாஞ்சே? மீண்டும் சூடுபிடிக்கும் அமெரிக்காவுக்கு நாடுகடத்தும் வழக்கு!

0 10255
ஜூலியன் அசாஞ்சே

விக்கிலீக்ஸ் தொடர்பாக கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கு பல மாதங்களுக்குப் பின்பு மீண்டும் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு விசாரணைதான் ஜூலியன் அசாஞ்சேவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்ட 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். உலக நாடுகளின் ரகசிய ஆவணங்கள், மக்கள்மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், முறைகேடுகள், ஊழல் மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார்.

image

குறிப்பாக, ஈராக் நாட்டில்  அமெரிக்க ராணுவம் நடத்திய கோரத் தாண்டவம், அரசியல் கைதிகளை அடைக்கும் குவாண்டனமோ  சிறைச்சாலை உள்ளிட்ட தகவல்கள் உலகையே அதிர்ச்சியுறச் செய்தன. இது அமெரிக்காவுக்குப் பெரிய அளவில் தலைவலியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்கா கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் ரஷ்ய உளவாளி என்றும் அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.  சுவீடன் நாட்டில் அவர் மீது பாலியல் வழக்கும் பதிவானது. பாலியல் வழக்கை விசாரித்த  சுவீடன் நீதிமன்றம், ஜூலியன் அசாஞ்சே நீதிமன்றத்தில் ஆஜராகும் வாய்ப்பு இல்லாததால், வழக்கைக் கைவிட்டது. ஆனாலும், சுவீடன் நாட்டுக்குள் நுழைந்தால் இந்த வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஆதரவு வழங்கிய ஒரே நாடு ஈகுவடார் தான். லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதாரகத்தில் அவர் தஞ்சமடைந்தார். ஆனாலும், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அவரைக் கைவிட்டது ஈகுவடார். இதைத் தொடர்ந்து, 2019 - ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஈகுவடார் தூதரகத்துக்குள்ளே நுழைந்த பிரிட்டன் போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன் பிறகு, தென்கிழக்கு லண்டனில் HMP பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்  ஜூலியன் அசாஞ்சே. கைதான ஜூலியன் அசாஞ்சேவைத் தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அமெரிக்கா பிரிட்டனிடம் கோரிக்கை விடுத்தது. அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் நீதிமன்றத்தில் அசாஞ்வே வழக்கு தொடர்ந்தார் . கொரோனா அச்சுறுத்தலால் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் மீண்டும் விசாரணை தொடங்கவுள்ளது.

image

இந்த வழக்கு விசாரணை தான் ஜூலியன் அசாஞ்சேவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஜூலியன் அசாஞ்சேவை எப்படியாவது விடுவித்துவிட வேண்டும் என்று அவரது மனைவி ஸ்டெல்லா மேரிஸ் இந்திய ரூபாய் மதிப்பில் 85 லட்சம் வரை நிதி திரட்டி சட்டப்போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments