ஒரு விநாடி கோபம்... ஜோகோவிச் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பரிதாபம்!
ஒரு விநாடி ஏற்பட்ட கோபத்தால் தூக்கியடிக்கப்பட்ட பந்து லைன் நடுவர் மீது பட்டதால், உலகின் நம்பர் ஓன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க டென்னிஸ் ஓபன் தொடரில் ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் உள்ளிட்ட முக்கிய நட்சத்திர வீரர்கள் பங்கேற்கவில்லை. இதனால், செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஓன் வீரரான நோவக் ஜோகோவிச் எளிதாக பட்டத்தை கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 6 - ஆம் தேதி நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கரீனோ பஸ்டோவை ஜோகோவிச் எதிர்கொண்டார். கடும் சவால் கொடுத்த கரீனோ முதல் செட்டில் 6-5 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றதால் ஜோகோவிச் ஆத்திரமடைந்ததோடு, டென்னிஸ் பந்தை வேகமாக களத்துக்கு வெளியேவும் அடித்தார். ஆனால், ஜோகோவிச்சின் கெட்ட நேரத்தால், அவரால், அடிக்கப்பட்ட பந்து லைன் நடுவராக நின்ற பெண்ணின் முகத்தில் பட்டு விட்டது . இதில், நிலை தடுமாறிய அந்த நடுவர் கீழே விழுந்து வலியால் துடித்தார். உடனடியாக , அவரிடத்தில் ஓடி சென்ற ஜோகோவிச் மன்னிப்பு கேட்டதோடு, அந்த நடுவரை ஆசுவாசப்படுத்தவும் முயன்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் , தலைமை நடுவர் பெண் நடுவரிடத்தில் விசாரணை மேற்கொண்டார்். விசாரணைக்கு பிறகு, ஜோகோவிச் அமெரிக்க ஓபன் தொடரிலிருந்து தகுதி நீக்கம் செய்யபட்டதோடு, ஸ்பெயின் வீரர் கரீனோ பாஸ்டோ வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. தகுதிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து, ஜோகோவிச் உடனடியாக களத்திலிருந்து வெளியேறினார். இந்த சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் மன்னிப்பு கோரிய ஜோகோவிச், தற்போதயை சூழ்நிலை எனக்கு வேதனையையும் வெறுமையையும் தந்துள்ளது.நிச்சயமாக வேண்டுமென்றே இந்த தவற்றை நான் செய்யவில்லை.பாதிக்கப்பட்ட நடுவர் மற்றும் அமெரிக்க ஓபன் நிர்வாகத்திடமும் என் நடத்தைக்காக மன்னிப்பு கோருகிறேன் '' என்று தெரிவித்துள்ளார்.
டென்னிஸ் உலகில் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் ரஃபேல்ர நடால் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றுள்ளனர்.தற்போது 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். நடப்பு அமெரிக்க ஓபனில் இருந்து தகுதிநீக்கம் செய்யபட்டதால், ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால் சாதனைகளை முறியடிப்பதில் ஜோகோவிச்சுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Comments