இலங்கையில் தீவிபத்துக்குள்ளான கப்பலை மீண்டும் இயக்குவது குறித்து வான்வழியே ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு
இலங்கை அருகே தீ விபத்து ஏற்பட்ட கப்பலை மீண்டும் இயக்குவது குறித்து வான்வழியே ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குவைத்திலிருந்து, ஒடிசாவில் உள்ள பாராதீப் துறைமுகத்துக்கு நியூடைமண்ட் என்ற பனாமா நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல், எண்ணெய் ஏற்றி வந்தது.
சுத்திகரிப்பு நிலையத்துக்கு 20 லட்சம் பேரல்களில் எண்ணெய் ஏற்றி வந்த சுமார் 100 அடி நீள கப்பல், 3 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்பகுதியில் வந்துகொண்டிருந்த போது, இஞ்ஜினில் திடீரென தீப்பற்றியது. மற்ற பகுதிகளுக்கும் பரவி மளமளவென எரியத் தொடங்கியது.
சுமார் 36 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இலங்கை கடற்படை கப்பல்கள், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சவுர்யா, சுஜய் கப்பல்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. இருந்தபோதிலும் கப்பலில் இருந்து அதிகளவு புகையுடன் தீப்பிழம்புகள் வெளிப்படுவதால் உலர் கெமிக்கல் பவுடர் வீசும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை கடற்கரைக்கு அருகே 70 கிலோ மீட்டர் தூரத்தில் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், எண்ணெய் கசிவு எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் இந்திய கடற்படைக்கு சொந்தமான சஹ்யாத்ரி கப்பல் உன்னிப்பாக கவனித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கப்பலில் இருந்து ஏதேனும் கசிவு ஏற்பட்டால் அது கடல் வாழ் உயிரினங்களுக்கு பேரழிவு தரும் என்று இலங்கை கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தர்ஷனி லஹந்தபுரா தெரிவித்துள்ளார்.
Comments