திருடிய வீட்டில் மகன் பெயரை கிறுக்கிய திருடர் குல திலகம்..! ஆக்டிவாவுடன் அகப்பட்டான்
சென்னையில் தனியாக இருந்த வீடு ஒன்றில் போதையில் நுழைந்து திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவன் தன் மகனின் பெயரை சுவற்றில் எழுதி வைத்து விட்டு சென்றதால் போலீசில் சிக்கி உள்ளான். வீட்டில் திருடிய ஆக்டிவாவிலும் மகனின் பெயரை எழுதி வைத்ததால் அகப்பட்ட அப்பா கொள்ளையன் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் செளந்தர்ராஜன். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 27ம் தேதி தனது சொந்த ஊரான ஆரணிக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார்.
கடந்த 1ம் தேதி வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கதவு திறந்திருப்பதாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சிவகுமார் என்பவர் செளந்தர்ராஜனுக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த 24 இன்ச் எல்ஈடி டிவி, 2 கிராம் தங்க நகை, சிலிண்டர், மடிக்கணினி, ஹோண்டா ஆக்டிவா பைக் ஆகியவை திருடுபோனதை கண்டு ஆசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் செளந்தர்ரராஜன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை போலீசார் சேகரித்தனர்.
கொள்ளை நடந்த வீட்டில் கொள்ளையன் ஒற்றைக்கால் செருப்பை விட்டுச்சென்றதை கண்டுபிடித்த போலீசாரிடம், வீட்டின் சுவற்றில் விஷ்ணு என்ற பெயரும் புதிதாக எழுதியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான வகையில் விஷ்ணு என்ற பெயருடன் வந்த ஆக்டிவா ஸ்கூட்டரில் வந்தவரை மடக்கி விசாரித்தபோது கொள்ளை சம்பவம் தொடர்பாக துப்பு துலங்கியது.
சம்பவத்தன்று மதன், தனது நண்பர் ராகுலுடன் ஆசிரியரின் வீட்டிற்கு அருகே உள்ள மதுக்கடைக்கு சென்றுள்ளார். வீடு பூட்டப்பட்டுள்ளதை பார்த்துள்ளனர். அளவுக்கு அதிகமாக மதுக்குடிக்க கையில் பணம் இல்லாததால் ஆசிரியரின் வீட்டு பூட்டை உடைந்து உள்ளே புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.
வீட்டில் இருந்ததையெல்லாம் மூட்டைகட்டி சுருட்டிய மதன், தனது ஆசை மகன் விஷ்ணுவின் பெயரை கொள்ளையடிக்கச் சென்ற வீட்டின் சுவற்றில் எழுதி வைத்துள்ளார். அங்கு திருடிய ஆக்டிவாவில் ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த சிலுவை ஸ்டிக்கரை அகற்றிவிட்டு, விநாயகர் ஸ்டிக்கர் ஒட்டி இருந்த மதன், அதிலும் தனது மகன் விஷ்ணுவின் பெயரை எழுதி வைத்திருந்ததால் ஆக்டிவாவின் ச்சேஸ் நம்பரை ஆய்வு செய்த போது அந்த வண்டி ஆசிரியர் வீட்டில் களவாடப்பட்டது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
புகார் அளித்த ஆசிரியர் செளந்தர்ராஜனை சம்பவ இடத்திற்கு வந்து, அது அவருடைய ஆக்டிவா ஸ்கூட்டர் தான் என்பதை உறுதிப்படுத்தினார். ஸ்டிக்கரையும், வாகன பதிவு எண்ணையும் மாற்றிவிட்டால் போலீசாரிடமிருந்து எளிதாக தப்பித்துவிடலாம் என்ணு எண்ணிய களவானி மதனின் கனவு கலைந்தது. மதனையும் அவனது கூட்டளி ராகுலையும் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மகன் மீது அன்பு கொண்ட பாசக்கார அப்பா மதன் செய்த பெயர் கிறுக்கலால் கொள்ளை வழக்கில் போலீசில் சிக்கி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
Comments