மருத்துவ கல்வி சான்றுகளை மீண்டும் மறுபதிவு செய்ய அறிவிப்பு.. மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு..!

0 3454

தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் தங்கள் மருத்துவ கல்வி சான்றுகளை மீண்டும் மறுபதிவு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான பதிவு பெற்ற மருத்துவர்கள் உள்ளனர். இந்த நிலையில் 15 ஆயிரத்தில் தொடங்கி 40 ஆயிரம் வரையிலான பதிவெண்ணை கொண்ட மூத்த மருத்துவர்கள் தங்கள் மருத்துவ கல்வி பதிவை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கடைசி நாளாக 31ந்தேதி அறிவிக்கப்பட்டது.

மூத்த மருத்துவர்கள் ஒவ்வொருவரும் 510 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்கள் கல்வி சான்றிதழ்களை மீண்டும் மருத்துவ கவுன்சிலில் புகைப்படத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 31 ந்தேதிக்கு பின்னர் 40 ஆயிரத்தில் தொடங்கி 60 ஆயிரம் வரையிலான பதிவெண்ணை கொண்ட மருத்துவர்கள் தங்கள் சான்றிதழ்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள தமிழ் நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் செந்தில்..! இந்த கொரோனா காலத்தில் 58 வயதுக்கு மேல் தமிழகத்தில் எத்தனை பேர் உயிருடன் உள்ளனர் என்பதை கண்டறிய இந்த பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த உத்தரவு , கொரோனா காலத்திலும் அஞ்சாமல் மக்கள் சேவையாற்றும் மூத்த மருத்துவர்களை அவமதிக்கும் செயல் என்றும் தனிப்பட்ட நபர் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்காக செய்யப்படும் முறையற்ற செயல் என்று கொதிக்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போது கொரோனா காலகட்டத்தில் இப்படிப்பட்ட உத்தரவு ஏன் ?என்றும், ஏற்கனவே மருத்துவர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ் கொடுத்து வாழ் நாள் பதிவு கட்டணமும் செலுத்தி மருத்துவ கவுன்சிலில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள நிலையில் மீண்டும் பணம் வசூலிப்பது ஏன் ? என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இன்னும் சில மாதங்களில் மருத்துவ பதிவு முறை தேசியமயமாக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் மீண்டும் பதிவு என்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும் ? என்றும் மூத்த மருத்துவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே டிஜிட்டல் பெயர்பலகை எனக்கூறி மருத்துவர்களிடம் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவ கவுன்சில் பணம் வசூலித்தும் அது செயல்பாட்டுக்கு வராதது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments