உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி... விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை

0 7093
உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி... விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை

பிரதமரின் உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதில்  கடலூர் மாவட்டத்தில் 8 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது. இந்த உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் ,கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத சுமார் 37 ஆயிரம் பேர் பயனடைந்தது ஆய்வில் தெரியவந்தது. அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இதுவரை நான்கரை கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வேளாண்துறையில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 3 பேரையும் பணியில் திறமையில்லாதவர்கள் என 10 ஒப்பந்த ஊழியர்களையும் மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்துள்ளார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் களமிறக்கப்பட்டு விஜயநகரம் பகுதியில் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேளாண் துறை மற்றும் கணினி மையங்களைச் சேர்ந்த 8 பேரை கடலூர் அலுவலகம் அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நாமக்கல் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முறைகேடாகப் பயனடைந்த 340 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார். போலியான ஆவணங்கள் கொடுத்த அனைவரிடம் இருந்தும் பணத்தை திரும்ப வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுற்றுவட்டாரத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 88 பேர் போலியான ஆவணங்களைக் கொடுத்து திட்டத்தில் பயனடைந்தது தெரியவந்தது. அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்கி இதுவரை 26 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வருவாய்த்துறை சார்பில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, கிராமம் கிராமமாக நேரடியாகவும் சென்று பணத்தை வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

கரூர் மாவட்டத்தில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் முதற்கட்டமாக 1500 பேர் போலியான பயனாளிகள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு இதுவரை 12 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments