உழவர் பாதுகாப்புத் திட்ட மோசடி தீவிரமடையும் சிபிசிஐடி விசாரணை
கடலூர் மாவட்டத்தில் பிரதமரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் அரங்கேறிய மோசடி தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 8 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காக கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த உழவர் பாதுகாப்பு திட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் விவசாயி அல்லாதோரும் பயனடைந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத சுமார் 37 ஆயிரம் பேர் பயனடைந்தது ஆய்வில் தெரியவந்தது. அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு இதுவரை நான்கரை கோடி ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வேளாண்துறையில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 3 பேரையும் பணியில் திறமையில்லாதவர்கள் என 10 ஒப்பந்த ஊழியர்களையும் மாவட்ட ஆட்சியர் பணி நீக்கம் செய்துள்ளார்.
இந்தநிலையில் முறைகேடு தொடர்பாக வேளாண்துறை இணை இயக்குனர் முருகன் அளித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கினர்.
தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக அதிகளவில் மோசடி நடைபெற்றதாகக் கூறப்படும் விஜயநகரம் பகுதியில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வேளாண் துறை மற்றும் கணினி மையங்களைச் சேர்ந்த 8 பேரை கடலூர் அலுவலகம் அழைத்து வந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments