‘பிரதமர் மோடியின் பாதுகாப்புக்குச் செல்கிறேன்’ - மதுரை விமான நிலையத்துக்குள் ஏர்கன்னுடன் நுழைந்த வாலிபர்!
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புப் பணிக்குச் செல்வதாகக் கூறி 4 ஏர்கன் துப்பாக்கிகளுடன் மதுரை விமான நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை விமான நிலையத்துக்கு இருசக்கர வாகனம் மூலம் வந்த வாலிபர் ஒருவர், பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் தனது வாகனத்தை நிறுத்த முயன்றார். உடனே, விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, பரிசோதனை மேற்கெண்டனர். அப்போது அவரது கையில் குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு ஏர்கன் துப்பாக்கியும் பையில் மூன்று ஏர்கன் துப்பாக்கிகளும், நான்கு செல்போன்களும் இருந்தன. ஏர்கன் துப்பாக்கிகளுடன் வந்த வாலிபரைக் கைது செய்த பாதுகாப்புப் படை வீரர்கள் விசாரிக்கத் தொடங்கினர்.
விசாரணையில் , “நான் பிரதமர் மோடிக்குப் பாதுகாவலனாகச் செல்கிறேன். டெல்லிக்கு என்னை அழைத்துச் செல்ல தனி விமானம் வருகிறது. மேலும், எனக்கு 1000 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருப்பதால் என்னை உங்களால் தொடக்கூட முடியாது. நான் புதிதாக வங்கி தொடங்கி விவசாயிகளுக்குக் கடன் தரப் போகிறேன். நான் நாட்டு நலனுக்காகப் போராடும் ஸ்லீப்பர் செல்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, அந்த வாலிபர் கொண்டு வந்திருந்த 4 ஏர்கன் மற்றும் 4 செல்போன்களையும் பெருங்குடி போலீசாரிடம் பாதுகாப்புப் படை வீரர்கள் ஒப்படைத்தனர்.பெருங்குடி போலீஸார் விசாரணை செய்ததில், அந்த வாலிபர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள வெங்கட சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் அஸ்வத்தாமன் (வயது 21 ) என்பது தெரியவந்தது. பட்டதாரி வாலிபரான இவர் கல்லூரியில் படிக்கும்போதே என்.சி.சியில் இருந்துள்ளார். திடீரென்று மனநலம் பாதித்த நிலையில் , இரு சக்கர வாகனத்தில் மதுரை விமான நிலையம் வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அஸ்வத்தாமனின் தந்தை பாஸ்கரனை வரவழைத்த போலீசார் அவரிடம் எச்சரித்து ஒப்படைத்தனர்.
Comments