கிசான் திட்டத்தில் போலி விவசாயிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டல்... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்து பணம் பெற்ற 90 ஆயிரம் போலி விவசாயிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் போலியான விவசாயிகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்த 3 ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 2 ஏக்கருக்கு குறையாமல் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் செய்வதற்கு உதவும் வகையில் ஒரு தவணைக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் ஆன்லைன் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் போலியான விவசாயிகளை சேர்த்து கணக்கு காட்டி 5 கோடியே 40 லட்சம் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து இது குறித்து சிபிசிஐடி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில் காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 42 ஆயிரம் பேர் விவசாயிகள் என போலியாக இந்த திட்டத்தில் மோசடியாக சேர்க்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பிரதம மந்திரியின் கிசான் திட்ட பயனாளிகள், தாக்கல் செய்யும் விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் ஆன்லைனில் பதிவு செய்யாமல், போலியான ஆவணங்களை கொண்டு நிலமே இல்லாத நபர்களையும், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாத நபர்களையும் விவசாயிகள் என்று குறிப்பிட்டு மோசடியாக இந்த திட்டத்தில் சேர்த்திருப்பதும் தலா 1000 ரூபாய் வரை கமிஷன் பெற்றுக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
முதற்கட்டமாக கணிணியில் பதிவேற்றும் ஒப்பந்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியாக 3 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக மணிரத்தினம் விசுவநாதன், அறிவுசெல்வன் ஆகிய 3 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 90 ஆயிரம் போலியான விவசாயிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரின் வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை 4 கோடியே 20 லட்சம் ரூபாய் அளவிற்கான பணத்தை போலியான விவசாயிகள் கணக்கில் இருந்து மத்தியரசு அதிரடியாக கைப்பற்றியுள்ளது. விவசாயிகள் மட்டுமல்ல உயிரோடு இல்லாதவர் பெயரிலும் வங்கி கணக்கு தொடங்கி மோசடியாக பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான மாவட்டங்களில் உழவர் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், 2 ஏக்கார் நிலம் இல்லாதவர்கள் கூட பயிர்செய்வதாக கூறி ஏமாற்றி பணம் பெற்று வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் பணம் பெற்றுவரும் விவசாயிகள் அனைவரின் விவரங்களையும் தனியாக ஒரு குழு அமைத்து சரிபார்க்க வேண்டியது அனைவரின் எதிர்பார்ப்பு.
Comments