ஆன்லைன் வகுப்புகளில் ஆபாச வீடியோக்கள் - கேரளாவில் அடுத்தடுத்து அதிர்ச்சி!
கேரளாவில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் டிஜிட்டல் தளங்களில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்தே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், தான் ஆசிரியர்கள் கான்பரன்சிங் கால் மூலம் பாடம் நடத்தும் சூம் மற்றும் வாட்ஸ்அப்- க்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களையும், ஆபாச படங்களையும் பதிவேற்றிய சம்பவம் கேரளாவில் மூன்று இடங்களில் நடந்துள்ளன.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், எடப்பால் என்ற இடத்திலுள்ள சி.பி.எஸ்.இ தனியார்ப் பள்ளியில் சூம் செயலி மூலம் நடத்தும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்குள் புகுந்த மர்ம நபர்கள் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது ஆபாச வீடியோக்களை ஒளிபரப்பினர். இதனால், உடனே ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, பரப்பனங்காடி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் வாட்ஸ்அப் குழுவுக்குள் ஊடுருவிய மர்ம நபர்கள் சிலர் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினர். இதைக் கண்ட ஆசிரியர்கள் உடனே அந்த வாட்ஸ்அப் குழுவைக் கலைத்தனர். ஆனால், மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவின் நடவடிக்கைகளை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்திருந்ததால், ஆன்லைன் கிளாசில் கலந்துகொண்டவர்களின் தொடர்பு எண்கள், அதில் பகிரப்பட்ட ஆபாச வீடியோக்கள் அடங்கிய வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
”ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இந்தக் சம்பவம் குழந்தைகளை மனதளவில் பாதித்துள்ளது. தொடக்கத்தில் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பிறகுதான் குழந்தைகள் நல ஆணையத்தைத் தொடர்பு கொண்டு புகார் அளித்தோம். ஆனால், நிறைய பள்ளிகள் இந்தப் பிரச்னைகளை வெளியே சொல்லாமல் அமைதி காக்கின்றன” என்று புகரளித்த ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்
இந்த சம்பவம் குறித்துக் காவல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை நடத்தும் காவல் துறை அதிகாரிகள், “சூம், வாட்ஸ்அப், கூகுள் மீட், ஸ்கைப் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் மூலம் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. ஒவ்வொரு செயலிகளின் குழுவையும் அரசு கண்காணிப்பதென்பது சாத்தியமில்லாதது. அதனால், ஆசிரியர்களும், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களும் தான் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர்.
Comments