இ.எம்.ஐ தள்ளிவைப்பு வழக்கு.. 2 மாதங்கள் வாராக்கடனாக அறிவிக்க வங்கிகளுக்கு தடை

0 3500

ஊரடங்கு காலத்தில் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், வாராக் கடனாக 2 மாதங்களுக்கு அறிவிக்க கூடாது என்று வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கொரோனா பாதிப்பால் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, மாதாந்திர கடன் தவணை தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தள்ளி வைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.

எனினும், அந்த காலத்தில் வட்டிக்கு வட்டி கணக்கிடப்படுவதை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நீதிபதிகள் அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டதன் காரணமாக மாதாந்திர தவணை செலுத்துவது தள்ளிவைக்கப்பட்டது, வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அல்ல என்றும் விளக்கம் அளித்தார்.

வேண்டும் என்றே கடனை செலுத்தாமல் இருப்பவர்கள் பயனடைய முடியாது என்று வாதிட்டார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக இருக்கும் வங்கி துறை பலவீனமடைவதை அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மருந்து, தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு நல்லதே நடந்துள்ளது என்றும் அவர் வாதிட்டார். வரும் 6 ஆம் தேதி துறை வாரியாக ஆய்வு செய்து வல்லுனர் குழு வழிகாட்டு நெறிமுறைகளை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட மொத்த கூட்டு வட்டி எவ்வளவு என்பதே தற்போதைய கேள்வி என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தவணை தள்ளிவைப்பும், அபராத வட்டியும் ஒன்றாக செயல்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இஎம்ஐ செலுத்தாதவர்களின் கணக்குகளை, அடுத்த உத்தரவு வரும் வரை 2 மாதங்களுக்கு வாராக்கடனாக வங்கிகள் அறிவிக்க கூடாது என்று நீதிபதிகள் இடைக்கால உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 10 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments