எல்லையில் தளபதிகள்... யுத்த வியூகத்திற்கு ஆயத்தம்
லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவம் அடிக்கடி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் இது போன்ற ஆக்கிரமிப்பை அடுத்து இரு நாட்டு படைகளும் மோதலில் ஈடுபட்டன. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இதையடுத்து எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்தது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது.
தொடர்ந்து ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ஏற்கனவே எட்டப்பட்ட உடன்பாடுகளை மீறி கிழக்கு லடாக் அருகே சீன ராணுவம் கடந்த 29ம் தேதி இரவு பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதே போன்று கடந்த 1 ஆம் தேதி அன்றும் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே லடாக்கின் லே பகுதிக்கு சென்றார்.
2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ள நரவானே, ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். எல்லை பகுதி ராணுவ உயரதிகாரிகள், அங்குள்ள கள நிலவரம் குறித்து தளபதி நரவானேவிடம் விரிவாக எடுத்து கூறியுள்ளனர்.
நாளை, எல்லையில் உள்ள பாதுகாப்பு நிலவரங்களை நரவானே நேரில் ஆய்வு செய்ய உள்ளார். சீன துருப்புக்களை எதிர்கொள்வதற்காக நிறுத்தப்பட்டிருக்கும் படையினரின் தயார் நிலையை ஆய்வு செய்யும் ராணுவத் தளபதி நரவானே, அங்கு ராணுவத்தினருடன் கலந்துரையாடுவார் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ராணுவ தளபதி நாட்டின் வடக்கு படை நிலையை பார்வையிட சென்றுள்ள நிலையில், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பகதூரியா கிழக்கு பகுதியில் உள்ள விமான படை தளங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் சீனா எல்லையை ஒட்டிய இந்திய விமான படை தளங்களில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு விமானபடையின் யுத்த தயார் நிலை குறித்தும் அவர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள விமானப்படையினருடன் அவர் கலந்துரையாடிய தாகவும் விமானப்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ராணுவ, மற்றும் விமானப்படை தளபதிகள் போர் ஆயத்த நிலையை நேரில் பார்வையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments