வீரப்பன் போல வனத்தை விட்டு வெளியேவரும் மாவோயிஸ்ட் ... முடிவுக்கு வருகிறதா ஆயுதப் போராட்டம்?

0 8163
மாவோயிஸ்ட் தலைவர் முப்பலா லட்சுமண ராவ்

மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் முப்பலா லட்சுமண ராவ் போலீசில் சரணடைய முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவில் நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. 

தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள சாரங்காபூரில் பிறந்தவர் கணபதி எனும் முப்பலா லட்சுமண ராவ். கரீம்நகரில் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டு நக்சல் ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். வட இந்தியாவில் நடைபெற்ற தாக்குதல்கள்  பலவற்றுக்கும் மூளையாகச் செயல்பட்டார். அதன்பிறகு, மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவரானார்.

இந்த நிலையில், தற்போது, 74 வயதாகும் முப்பலா லட்சுமண ராவ் இரண்டு வருடங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு காரணமாக மாவோயிஸ்ட் அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து விலகிக்கொண்டார். ஆனாலும், மாவோயிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராகவே நீடித்தார். அவர் எங்கு மறைந்துள்ளார் என்று போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா அல்லது  மகாராஷ்டிரா மாநிலங்களில் ஏதாவது ஒரு  வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. நீண்ட காலமாகத் தேடப்பட்டு வரும் முப்பலா லட்சுமண ராவ் பற்றி துப்பு கொடுப்பவருக்கு 2 கோடி வரை பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது மூப்பு காரணமாக முப்பலா லட்சுமண ராவின் உடல்நிலை பாதித்து ஆஸ்துமா, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். இதனால், வனத்தை விட்டு வெளியே வந்து சிகிச்சை பெறுவதற்காக போலீசில் சரணடைய முப்பலா லட்சுமண ராவ் முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரணடைவது குறித்து  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர்களிடம் முப்பலா லட்சுமண ராவ் பேசி வருவதாகச் சொல்லப்படுகிறது.  மாவோயிஸ்ட் இயக்கத்தின்  தலைவரான முப்பலா லட்சுமண ராவ் போலீசில் சரணடைந்தால், இந்தியாவில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments