சாத்தான்குளம் போல கொடூரங்கள் நிகழ்த்தும் நியூயார்க் போலீஸ்.. கதறியபடி நியாயம் கேட்கும் பலியானவர் குடும்பம்!

0 2864

அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது காவல்துறையினர் கொடூரமாக தாக்கி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், நியூயார்க் நகர காவல்துறையினரால் கருப்பின இளைஞர் ஒருவர் கொடுரமாக கொல்லப்பட்ட வீடியோவை அந்த இளைஞரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

நியூயார்க் நகரத்தில் கடந்த மார்ச் 23 - ஆம் தேதி கருப்பின  இளைஞரான டேனியல் ப்ரூட் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 30 - ஆம் தேதி அவர் இறந்தும் போனார். நேற்று வரை டேனியல் ப்ரூட்டின் இறப்பு பெரியதாக பேசப்படவில்லை. இந்த நிலையில், டெனியல் ப்ரூட்டின் குடும்பத்தினர் நேற்று நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது,  ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை வெளியிட்டனர். அதில், போலீஸார் சுற்றி நிற்க டேனியல் ப்ரூட்  சாலையில் நிர்வாண நிலையில் இருக்கிறார். அவரின் கை பின்னால் கட்டப்பட்டு கைவிலங்கு போடப்பட்டுள்ளது. போலீஸார் ஒருவர் spit hood என்று சொல்லப்படும் பிளாஸ்டிக்பை போன்ற பொருளால்  டேனியலின்  முகத்தை மூடுவது போன்ற  காட்சிகள் அதில் இருந்தன.image

கொரோனா பரவல் காரணமாக தங்கள் மீது டேனியல் ப்ரூட் எச்சில் உமிழ்ந்து விடக் கூடாது என்பதற்காக போலீஸர் ஸ்பிட் கூட்டை வைத்து அவரின் முகத்தை மூடியதாக சொல்லப்படுகிறது. தன் முகத்தில் மூடப்பட்ட ஸ்பிட்கூட்டை அகற்ற டேனியல் ப்ரூட் போராடியதால், ஆத்திரமடைந்த  போலீஸார் அவரின் முகத்தை பிடித்து சாலையில் அடித்ததில் படுகாயமடைந்தார். இந்த சம்பவத்தால் ப்ரூட்டின் உடல் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார்.

டேனியல் ப்ரூட் சற்று மன நிலை பாதித்தவர் என்று சொல்லப்படுகிறது. சிகாகோலிருந்து தன் சகோதரர் ஜோ ப்ரூட் வீட்டுக்கு அவர் வந்துள்ளார். அப்போது, திடீரென்று வீட்டிலிருந்து டேனியல் ப்ரூட் காணாமல் போய் விட்டார். இதையடுத்து, ஜோ ப்ரூட் அவசர எண் 911- ஐ அழைத்து தன் சகோதரர் காணாமல் போனது குறித்தும் சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல்  கூறியுள்ளார். இதையடுத்து,  போலீஸார் அவரை தேடிய போது, நியூயார்க் நகரின் மேற்கு பகுதியில் உள்ள ரோசஸ்டர்  என்ற இடத்தில் காவல்துறையினரிடத்தில் டேனியல் ப்ரூட் பிடிபட்டுள்ளார்.

அப்போதுதான், மன நிலை பாதித்தவர் என்று சற்றும் யோசிக்காமல் காவல்துறையினர் இந்த கொடூரத்தை நிகழ்த்தியுள்ளனர். டேனியல் ப்ரூட்டின் மரணம் மூச்சுத்திறணல் காரணமாக நிகழ்ந்துள்ளதாக உடல் கூறு ஆய்விலும்சொல்லப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நியூயார்க் மாநகர அட்டர்னி ஜெனரல் லெதிதா ஜேம்ஸ்  விசாரணை நடத்தி வருகிறார்.

டேனியல் ப்ரூட்டின் மரணம் குறித்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதால் அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments