கொலையில் முடிந்த சந்தேகம் ... கணவரை தீர்த்து கட்டிய மனைவி
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கணவரை கொலை செய்ததாக மனைவி மற்றும் மாமியார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
முதல் முயற்சியில் நூலிழையில் உயிர் தப்பிய கணவரை, ஒரு மாதத்திற்குள் கூலிப்படை உதவியுடன்தீர்த்து கட்டியது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு. எலக்ட்ரிசன் ஆன இவர், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாதனூர் ஒன்றிய பிரதிநிதியாகவும் இருந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி யும் , 10 வயதில் ஒரு மகள், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
ஜெயந்தி, உள்ளூர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரமேஷ்பாபு, தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ,ஜெயந்தியை, அடித்து உதைப்பார் என கூறப்படுகிறது.
கணவருடன் வாழ முடியாததால், தனது தாயார் சரசு உதவியுடன், கூலிப்படையை வைத்து, ரமேஷ்பாபுவை தீர்த்து கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ரமேஷ் பாபுவை, கூலிப்படை உதவியுடன் காரை ஏற்றி கொலை செய்து விட்டு, விபத்து போல நாடகம் ஆட மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்த கொலை முயற்சியில் ரமேஷ்பாபு, லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
கடந்த 27 ஆம் தேதி, விவசாய நிலத்திற்கு ரமேஷ் பாபு. மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பாலாறு அருகே கொலை செய்து, உடலை அருகே இருந்த ஏரிக் கால்வாய் பகுதியில் தூக்கி வீசியெறிந்து விட்டு, கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
பிரேத பரிசோதனையில் இரும்பு கம்பியால் தலையில் அடித்து ரமேஷ் பாபு கொலை செய்யப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆம்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், கட்டிய கணவரை, கூலிப்படை உதவியுடன்மனைவியே தீர்த்து கட்டியது அம்பலமானது. ரமேஷ்பாபு கொலை தொடர்பாக அவரது மனைவி ஜெயந்தி, மாமியார் சரசு, கூலிப்படையினர் ராமன், கவுதமன் விக்கி என்கிற விக்னேஷ், தனுஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட 6 பேரும் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைக்கேறிய போதை - கண்ணை மறைத்த சந்தேகம் - உறவில் விழுந்த விரிசல் என ஒரு குடும்பம் சீரழிந்து, மனைவி கொலை பழி சுமக்க, இரு குழந்தைகளும் தந்தையை இழந்து தவிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
Comments