இந்தியாவில் மோசடி, ஆஸ்திரேலியாவில் முதலீடு... அப்பாவி மக்களை திட்டமிட்டு ஏமாற்றிய பாப்புலர் பைனான்ஸ்!

0 28631

இந்தியாவில் அப்பாவி மக்களை ஏமாற்றி, பணத்தை மோசடி செய்த பாப்புலர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் தாமஸ் டேனியல் , ஆஸ்திரேலியாவில் ஏராளமான முதலீடு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 1965 - ஆம் ஆண்டு பள்ளி ஆசிிரியராகப் பணியாற்றிய டேனியல் என்பவரால் கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் பாப்புலர் பைனான்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. டேனியலின் நாணயமான நடத்தை காரணமாக பாப்புலர் பைனான்ஸ் நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கியது. டேனியல் காலத்துக்கு பிறகு, அவரின் மகன் தாமஸ் டேனியல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனார். இதைத் தொடர்ந்து, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாப்புலர் பைனான்ஸ் நிறுவனம் 250 கிளைகளுடன் செயல்பட்டது. பாப்புலர் பைனான்ஸ் என்ற பிராண்டின் கீழ் மேலும் 21 நிறுவனங்களும் தொடங்கப்பட்டன. ஆனால், நிர்வாகக் கோளாறு காரணமாக பாப்புலர் பைனான்ஸ் நிறுவனம் நஷ்டமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பே, பாப்புலர் பைனான்ஸ் நிறுவனம் நஷ்டத்தை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. ஆனாலும், மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடனேயே புது புது இடங்களில் கிளைகள் தொடங்கி முதலீட்டாளர்களிடம் பணத்தைத் திரட்டியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு 13 சதவிகித வட்டி தரப்பட்டது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு முதலீடுசெய்த மக்கள் இப்போது போட்ட பணம் திரும்பக் கிடைக்குமா என்ற பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது, பாப்புலர் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தாமஸ் டேனியல், இவரின் மனைவி பிரபா ஆகியோர் போலீஸில் சரணடைந்துள்ளனர். ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற டேனியல் தாமஸ் மகள்கள் ரீனு, ரியா ஆகியோர் டெல்லி விமான நிலையத்தில் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது, ஆஸ்திரேலியாவில் தாமஸ் டேனியல் சொத்துகள் வாங்கியிருப்பதும் ஐந்து வாகனங்கள் வாங்க பதிவு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மக்களிடம் மோடி செய்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்புக்கு அப்பாவி மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால், இன்டர்போல் அமைப்பின் உதவியை நாட காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments