'கள்ளழகர் 'படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? - முதல் முறையாக மனம் திறந்த சோனு சூட்

0 9560

நடிகர் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தில்தான் நடிகர் சோனு சூட் முதன் முதலில் வில்லனாக அறிமுகமானார். நாராயணா என்ற வேடத்தில் அந்த படத்தில் சோனு சூட் நடித்திருப்பார். பல தமிழ் படங்களில் சோனு சூட் நடித்திருந்தாலும் தனக்கு கள்ளழகர் படமே அடையாளத்தை கொடுத்ததாக சோனு சூட் நம்புகிறார். இந்த நிலையில் கள்ளழகர் படத்தில் நடிக்க தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது குறித்து நடிகர் சோனு சூட் NoFilterNeha என்ற நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில், சோனு சூட் கூறியதாவது, '' கடந்த 1999 ஆம் ஆண்டு எனக்கு தமிழ் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது, என் தாயார், '[ 30 நாள்களில் தமிழ் கற்றுக் கொள்வது எப்படி' என்ற புத்தகத்தை வாங்கிக் கொடுத்தார். அந்த புத்தகத்தை படித்து தண்ணீர், இங்கே வா போன்ற வார்த்தைகளை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டேன்.

சென்னையில் விஜயாவாகினி ஸ்டூடியோவுக்கு கள்ளழகர் பட தயாரிப்பாளர் ஹென்றி இயக்குநர் பாரதியும் என்னை வரச் சொன்னார்கள். என் வாழ்க்கை மாறப் போகிறது என்பதை அப்போதே நான்  உணர்ந்திருந்தேன்.  ஸ்டூடியோவில் இயக்குநர் பாரதி, தயாரிப்பாளர் ஹென்றி ஆகியோர் என்னிடத்தில் வந்தனர். உங்கள் உடல் அமைப்பு நன்றாக உள்ளது. அதனால்தான் கூப்பிட்டோம். உங்கள் டி சர்ட்டை கழட்டிட்டு உடல் அமைப்பை காட்ட முடியுமா? ' என்று கேட்டனர்.

என் உடல்வாகு அவர்களை கவர்ந்து விட கள்ளழகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சென்னையில் ஒரு மழை காலத்தில் நடந்த அந்த சம்பவத்தையும் அந்த நாளையும் என்னால் மறக்கவே முடியாது ''என்றார்.

கள்ளழகர் படத்திற்கு பிறகு ஏராளமான தமிழ்ப்படங்களில் சோனு சூட் நடித்து பிரபலமாகினார். தற்போது, கொரோனா ஊரடங்கு காலத்தில் சாமானியர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments