டாக்டர் . கபீல்கானை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு... மதுரா சிறையிலிருந்து நள்ளிரவில் விடுவிப்பு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டாக்டர். கபீல்கான் நேற்றிரவு மதுரா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி அலிகார் முஸ்லிம் பல்கலையில் நடந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் டாக்டர். கபீல்கான் கலந்து கொண்டார். அப்போது, வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக அவர் பேசியதாக உத்தரபிரதேச அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. தேசிய பாதுகாப்பு சட்டமும் அவர் மீது பாய்ந்தது. கடந்த சில மாதங்களாக அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றத்தில் கபீல்கானின் தாயார் நவுசத் பர்வீன் தன் மகனை விடுவிக்க உத்தரவிட கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் டாக்டர். கபீல்கானை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தவறானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நேற்றிரவு 11 மணியளவில் கபீல்கான் மதுரை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கபீல்கான், '' எனக்காக பிராத்தித்த அனைவருக்கும் நன்றி. மாவட்ட நிர்வாகம் என்னை விடுவிக்கத் தயாராக இல்லையென்றாலும் என் நல விரும்பிகளின் பிரார்த்தனை என்னை விடுவிக்க உதவியது. உத்தரபிரதேச அரசு ராஜ தர்மத்துடன் நடக்கவில்லை. குழந்தை போல உத்தரபிரதேச அரசு நடந்து கொள்கிறது. பாபா அம்பேத்கர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த சம்பவத்துக்கு பிறகு நானும் என் குடும்பத்தினரும் தொடர்ந்து இன்னல்களை சந்தித்து வருகிறோம். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் மற்றோரு வழக்கில் நான் சிக்க வைக்கப்படலாம் '' என்று தெரிவித்துள்ளார்.
Comments